காலை உணவுத் திட்டத்தின் நோக்கம் என்ன? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பட்டியல்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ‘காலை உணவுத் திட்டத்தை’ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினார்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

குடுமப்ச் சூழல், வறுமை, பள்ளிக்கும் வீட்டிற்குமான தூரம் என பல்வேறு காரணிகளால் மாணவர்கள் காலை உணவை புறக்கணிக்கின்றனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, கல்வி கற்பதிலும் தடை ஏற்படுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளின் உடல் நலம், உள நலத்தை மேம்படுத்தும் வகையில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் வரை பயன்பெறும் வகையில் குறிப்பிட்ட சில பள்ளிகளிலேயே செயல்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது வரவேற்பு பெற்றுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரங்களிலும், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிகள் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்திற்குரிய தொகையை, நிதி ஒதுக்கீடு என்று சொல்வதைவிட, நிதி முதலீடு என்று குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் அறிவை மேம்படுத்த, உள்ளத்தை மேம்படுத்த அரசு நிதி முதலீடு செய்திருக்கிறது. அந்த முதலீடு நிச்சயமாக நாட்டுக்கு லாபம் தரும் வகையிலான ஆற்றலாக, திறமையாக வெளிப்படும். அதுதான் உண்மை என்று கூறினார்.

காலை உணவுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளார்.

மாணவர்கள் பசியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும்.ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் அந்தக் குழந்தைகள் இருக்க வேண்டும்.இரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்கவேண்டும்.மாணவர்களுடைய வருகை பதிவை அதிகரிக்க வேண்டும்.வேலைக்குப் செல்கின்ற தாய்மார்களின் பணிச்சுமைய குறைக்க வேண்டும்.

இந்த ஐந்து நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் அரசின் இலட்சியம் என்றும் அதை முழுமையாக அடைந்தே தீருவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.