“சீனத் தூதருடன் உணவருந்தியபோது…” – ராகுல் காந்தியின் சீனா குறித்த பேச்சுக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: “இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது” என்று கார்கிலில் ராகுல் காந்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனா உடனான காங்கிரஸின் உறவு குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருவரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடந்திய நிலையில், காங்கிரஸுக்கும் பாஜகவும் இடையே இந்த வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

இது குறித்து பாஜக மாநிலங்களவை எம்.பி.யும், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான டாக்டர் சுதன்ஷு திரிவேதிரி கூறுகையில், “சீனாவுடனான அவர்களின் (காங்கிரஸ்) உறவையும், எங்களின் உறவையும் தெளிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம். கடந்த 2020-ல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததும், சீனாவில் உள்ள அறிவுஜீவி ஒருவர், தியனன்மென் சதுக்க நிகழ்வுக்கு பின்னர், சீனா ஒரு மோசமான தூதரக உறவில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி ஏன் சீனாவின் மீது இவ்வளவு அன்பினை வெளிப்படுத்துகிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பண உதவி கிடைத்ததாலா? ராகுல் காந்தி மக்கள் சொன்னதாக கூறுகிறார். யார் அந்த மக்கள்? டோக்லாம் மோதலின்போது சீனத் தூதருடன் அவர் இணைந்து உணவு சாப்பிட்டதை அவர் வெளியில் சொல்லவில்லை. ஆனால், சீனாவால் ஒரு படம் பகிரப்பட்டிருந்தது. நேருவின் காலத்தில், அவர்கள் சீனாவுக்கு உணவும், உதவிகளும் அளித்துள்ளனர் என்று நேருவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த 1962-ம் ஆண்டு அரசுடன் உதவியாக இருந்ததற்காக நேருவே ஆர்எஸ்எஸ்ஸை பாராட்டியுள்ளார். அப்படியானால் அவர் பொய் சொல்கிறாரா? நீங்கள் பொய் சொல்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, லடாக்கின் கார்கில் பகுதிக்குச் சென்ற ராகுல் காந்தி பேரணி ஒன்றில் பேசும்போது, “நான் பான்காங் ஏரிக்கு சென்றபோது, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இந்திய நிலம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இந்தியாவின் நிலம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்றும், பிரதமர் பொய் சொல்கிறார் என்றும் லடாக்கில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தெரியும்” என்று தெரிவித்திருந்தார்.

பிரிக்ஸில் மோடி – ஜிங்பிங் சந்திப்பு: இதனிடையே, சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிக்ஸ் மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜிங்பிங், இந்திய பிரதமர் மோடியுடன் பேசியபோது இந்திய பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வேண்டுகோள் விடுத்தார்” என்று தெரிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள இந்தியா, இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான சீனாவின் வேண்டுகோள் இன்னும் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனத் தூதரைச் சந்தித்தாரா ராகுல்? – டோக்லாம் மோதலின்போது ராகுல் காந்தி ரகசியமாக சீனத் தூதரைச் சந்தித்தார். அந்த விஷயம், சீனத் தூதர் அதுகுறித்த படத்தை பகிர்ந்த பின்னர் இந்தியாவுக்கு தெரியவந்ததாக பாஜக கூறிவருகிறது. இதனிடையே, சரியான நேரம் மற்றும் இடத்தினை குறிப்பிடாமல், ராகுல் காந்தி சீனா மற்றும் பூடான் தூதர்களைச் சந்தித்தார் என்று காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.