புதுடில்லி, பிரதமர் மோடியின் கல்வி தகுதி விவகாரத்தில், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிரதமரின் கல்வித் தகுதி தொடர்பாக, குஜராத் பல்கலையை விமர்சித்து, புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் கருத்து வெளியிட்டதை அடுத்து, இருவர் மீதும் ஆமதாபாத் நீதிமன்றத்தில் பல்கலை பதிவாளர் பியுஷ் படேல் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்ப ஆமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் ஆகியோர் குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆமதாபாத் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது.
இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
இது தொடர்பாக நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவில், ‘இந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
‘இது தொடர்பான விசாரணை வரும் 29ல் நடக்க உள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது’ என, தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement