`மரங்களை வெட்டினால் சிறை’ விவசாயிகளைப் பாதிக்குமா?

பசுமையை பாதுகாக்கவும் மாநிலத்தில் உள்ள வனப்பரப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் அரசின் முன் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டுவோர் மீது சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டனையும் விதிக்க கூடிய தண்டனைக்குரிய குற்றமாக மாற்றுவதற்கு அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மரங்கள்

இதனைத் தொடர்ந்து அரசு சமீபத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பசுமைக்குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்களுக்கு சட்டப்பூர்வ ஆணையை வழங்க 1994-ம் ஆண்டின் டெல்லி வனச்சட்டம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற மாநில சட்டங்களின் படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் 2030-ம் ஆண்டுக்குள் 260 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெல்லி சட்டத்தில் அனுமதியில்லாமல் மரத்தை வெட்டுபவருக்கு ஒரு வருடம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதேபோல் கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் உள்ளன. அதன் படி தனியார், பொது அல்லது அரசு சொத்து என எந்த நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்டினாலும் அரசிடம் அனுமதி பெறவேண்டும் மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

சுப்ரியா சாகு, ஐ.ஏ.எஸ்

இந்நிலையில், “மரங்களை வெட்டுவதை ஒழுங்குப்படுத்துவதற்கான வழிமுறையை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது” எனக் கூறியுள்ளார் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ.

இதை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ள சூழலியல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா, “ஒரு மாநிலத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு பரப்பு வனப்பகுதிகளாக இருக்க வேண்டும். இது விலங்குகள் நிறைந்த வனம் மற்றும் பொது இடங்களில் இருக்கக்கூடிய பசுமைப் பரப்பாக இருக்கலாம். வனப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டக்கூடாது என்ற விதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. அதேபோல் பசுமைப்பரப்பை பொறுத்தவரை பொது இடங்களில் இருக்கும் மரங்களை வெட்ட அனுமதி கேட்க வேண்டும். ஆனால் தனியார் மரங்களைப் பொறுத்தவரை பொதுமக்கள் தங்கள் தேவைக்காக மட்டுமே மரம் வெட்டுவார்கள். இதன் மீது சட்டம் திணிக்கப்பட்டால் மரத்தை நம்பி பிழைக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே மரம் வளர்ப்பு தொழில் ஈடுபடும் விவசாயிகள் அதில் சட்ட விதிமுறைகளால்தான் மரம் வளர்ப்பில் ஈடுபடாமல் உள்ளனர். எனவே, அரசு கொண்டுவரும் சட்டம் விவசாயி, தன் தேவைக்காக ஓரிரு மரங்கள் வெட்டுவதற்குத் தடையாக இருக்கக்கூடாது.

ரமேஷ் கருப்பையா

அதே நேரம் பொது இடங்களில் உள்ள மரங்கள் அல்லது நிறைய மரங்களை வெட்டுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருகாலத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காகச் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை வெட்டினார்கள். அதைப் பயன்படுத்தி, குறிப்பிட்டபகுதியையும் தாண்டி இருக்கும் மரங்களும் வெட்டப்பட்டன. அதற்கு மாற்றாக வேறு மரங்கள் நடப்படும் என சொன்னார்கள். ஆனால், சொன்னது எதுவும் செயலில் இல்லை. அந்த மரங்களை வெட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே முதலில் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளைப் பாதிக்காத வகையில் மரம் வெட்டும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக வேறு மரங்கள் நட வேண்டும், அதிலும் குறிப்பாக அதை நல்ல முறையில் பாதுகாத்து வளர்க்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.