போபால்: மத்தியப்பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான், நான்காவது முறையாக பதவி வகிக்கிறார். ம.பி.யின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ம.பி.யில் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் முதல்வர் சவுகான் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். ராஜேந்திர சுக்லா, கவுரிசங்கர் பிசேன், ராகுல் லோதி 3 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் இவர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களின் ராஜேந்திர சுக்லா, விந்த் பிராந்தியத்தின் ரேவா தொகுதியில் இருந்து 4-வது முறையாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவர் இதற்கு முன் ம.பி. அரசில் வர்த்தக அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
கவுரி சங்கர் பிசேன், மகாகோஷல் பிராந்தியத்தின் பாலகார் தொகுதியை சேர்ந்தவர். ராஜ்புத் சமூக தலைவர்களில் ஒருவர் ஆவார். காரக்பூரை சேர்ந்த ராகுல் லோதி, ஓபிசி தலைவர் ஆவார். 2021 மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்த விரிவாக்கத்துக்கு முன்பு அமைச்சரவையில் முதல்வர் சவுகான் உட்பட 31 பேர் இடம்பெற்றிருந்தனர். அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி ம.பி. அமைச்சரவையில் 35 பேர் வரை இடம்பெறலாம்.