சென்னை: தமிழகத்தில் மீண்டும் புரட்சிகளை செய்யவேண்டும் என, அதிமுக பொதுச்செயலருக்கு புரட்சித்தமிழர் பட்டம் வழங்கப்பட்டது என, முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமிக்கு மதுரை மாநாட்டில் ‘புரட்சித்தமிழர் ‘ விருது சமய பெரியோரால் வழங்கப்பட்டது. இதையொட்டி, மதுரை மக்களுக்கு நன்றியை செலுத்தும் விதமாக வலையங்குளம் கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு மாநாட்டு திடலில் அன்னதானம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதய குமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், ராமநாதபுரம் மாவட்ட செயலர் முனியசாமி, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் பெரியபுல்லான் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது: ”மதுரை அதிமுக மாநாடு திருப்பு முனையாக அமையும். 7.5 சகவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்து புரட்சி செய்ததால், மீண்டும் புரட்சியை செய்யவேண்டும் என, பொதுச் செயலருக்கு ‘புரட்சித்தமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அவர் முதல்வராக வரவேண்டும் என விரும்பும் மதுரை மண்ணின் மக்கள் மனம் குளிரவே அன்னதானம் நடத்தப்பட்டது. நாங்கள் எதிர்க்கட்சி, திமுக ஆளுங்கட்சி. நாங்கள் என்ன சாதனை செய்தாலும் குறையாக கூறுவதுதான் தற்போதைய அமைச்சர்களின் வாடிக்கை. மக்கள் என்ன சொன்னார்கள் எனப் பார்க்கவேண்டும்.
இம்மாநாடு வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தியது என, அனைவரும் கூறுகின்றனர். திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாநாடு உலகளவில் தமிழர்களின் மத்தியில் பேசப்படுகிறது. அதிமுக உதவியுடன் தான் பாஜக தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கிறது என , உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். இதற்கு அவருக்கு என்ன அருகதை உள்ளது. அவர்களை மக்கள் இனிமேல் ஏற்கமாட்டார்கள். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் ஆன்மா வழியில் பொதுச் செயலர் கே. பழனிசாமி எழுச்சி மாநாட்டை நடத்தினார். திமுக ஏமாற்று வித்தைக்காரர்கள். நீட் தேர்வு , கல்விக் கடன் ரத்து என, மக்களை ஏமாற்றியவர்கள். ,மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் கொடுப்பார்கள்.” என்றார்.