2023 ஜி20 மாநாடு செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி டெல்லியில் இன்று வரை நடைபெற்றது.
இம்மாநாட்டில் பல்வேறு நாட்டின் பிரமர்கள், தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இம்மாநாட்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் இந்தியத் திரைப்படங்கள் குறித்தும் பேசிய பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தைப் பாராட்டி பேசினார்.

இதுகுறித்துப் பேசிய பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, “அழகான நடனத்துடன் நகைச்சுவை நிறைந்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் ஆங்கிலேயர்கள் செலுத்திய அடக்குமுறையைப் பற்றிய ஆழமான விமர்சனம் இப்படத்தில் இருக்கிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் பிளாக்பஸ்டராக இருந்திருக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.
ஏனென்றால் என்னுடன் பேசும் ஒவ்வொருவரும், ‘நீங்கள் மூன்று மணிநேரக் கலகம் மற்றும் புரட்சி நிறைந்த இப்படத்தைப் பார்த்தீர்களா?’ என்று பலர் கேட்கிறார்கள். இப்படம் என்னை மிகவும் கவர்ந்தது என்றுதான் நான் எல்லோரிடமும் சொல்வேன். அப்படி என்னைக் கவர்ந்த இயக்குநர் மற்றும் கலைஞர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் புகழ்ந்தார்.
Sir… @LulaOficial
Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXo
— rajamouli ss (@ssrajamouli) September 10, 2023
இதற்கு இயக்குநர் ராஜமெளலி, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. நீங்கள் இந்திய சினிமாவைக் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி. ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தை ரசித்தீர்கள் என்பதை அறிந்தவுடன் என் மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது! இதை அறிந்த எங்கள் குழு மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் நாட்டில் நீங்கள் மகிழ்ச்சியான நேரத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.” என்று பிரேசில் அதிபருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.