Muttiah Muralitharan: 800 திரைப்படமும்; 1,711 நாள்கள் தொடர்ச்சியாக முதலிடத்திலிருந்த முரளியும்!

கமர்சியல் படங்கள் வெளியாகி அப்படங்களில் எந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்று, இன்றைய காலகட்டத்தில் போட்டிகள் நிலவிக் கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில் பயோ-பிக் எனப்படும் ஒருவரது வாழ்க்கையைத் தழுவி அல்லது வாழ்க்கை வரலாற்றையோ முன்வைத்து எடுக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. டங்கல், மேரி கோம், எம். எஸ். தோனி- தி அன்டொல்ட் ஸ்டோரி, கங்குபாய் கத்யவாடி, ராக்கெட்ரி: நம்பி விளைவு என்று வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

குறிப்பாக விளையாட்டு வீரர்களைக் குறித்து படம் எடுக்கும் பொழுது அது ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு வரவேற்பைப் பெறுகிறது. களத்தில் மட்டுமே தாங்கள் பார்த்து வியந்த தங்கள் ஆதர்ச வீரர்களின் வாழ்க்கைப் பயணத்தை அறிந்துகொள்வதில் பலருக்கும் விருப்பம் இருந்திருக்கிறது.

‘Once upon a time there lived a ghost’ என்று சொல்வது போல, கிரிக்கெட் உலகத்தில் புதிய சாதனையைப் படைத்த ஜாம்பவான் ஒருவர் இருக்கிறார். அவருக்கென்று தனி விளையாட்டுத் திறமையை வைத்துக்கொண்டு, கிரிக்கெட் உலகில் தனக்கென்று தனியொரு இடம் பதித்திருந்தார். அவர் தான் ‘முரளி அண்ணா’ என்றழைக்கப்படும் ‘முத்தையா முரளிதரன்’ இப்போது அவர் செய்த சாதனைகள், கடந்து வந்த பாதைகள் மற்றும் அவர் சந்தித்த சவால்கள் குறித்து ‘800’ என்ற பெயரில் எம். எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில், திரைப்படம் வெளியாக இருக்கிறது. முரளி அப்படி என்ன சாதனைகள் செய்திருக்கிறார்? எதற்காக இப்படத்திற்கு ‘800’ என்று பெயர் வைக்க வேண்டும்?

முத்தையா முரளிதரன்

1972 ஏப்ரல் மாதம் பிறந்த முத்தையா முரளிதரன் இலங்கையைச் சேர்ந்த மலையக தமிழர். ஆனால் இவரின் பூர்வீகம் தமிழ் நாடு. பள்ளிப் பருவத்தில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்த இவர், தொடக்கத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளராகவே இருந்தார். ஆனால் இவரின் பயிற்சியாளர், சுனில் ஃபெர்னான்டோவின் ஆலோசனைக்கேற்ப ‘ஆஃப்- ஸ்பின்’ முறையைக் கற்றுக்கொண்டு, ஒரு சுழற்பந்து வீச்சாளராக மாறினார். பள்ளிப்பருவத்திற்குப் பிறகு ‘தமிழ் கிரிக்கெட் மற்றும் தடகள கழகத்தில்’ இணைந்து கிரிக்கெட் உலகிற்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இலங்கை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. தனது முதல் போட்டியாக, 1992- ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி, 141 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நேரத்தில் தான், இலங்கையின் கிரிக்கெட் அணி தடுமாறிக் கொண்டிருந்தது. 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த அணியில் பந்து வீச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அப்பொழுது தான் முரளியின் என்ட்ரீ இலங்கை அணிக்கு நல்ல ஒரு பலமாக அமைந்தது. இதற்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் அணியின் காட்டில் அடை மழைதான்! வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது இலங்கை அணி. அதற்கு முக்கிய காரணமும் முத்தையா முரளிதரன். 1993- ல் தென்னாப்பிரிக்காவிற்கு  எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில், 104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே முரளியின் முதல் Five wicket haul. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இவர் 67 முறை Five wickets haul மற்றும் 22 முறை ten wickets haul எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, 1995- ல் டிசம்பர் மாதம், ஆஸ்திரேலியாவிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான பாக்ஸிங்- டே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முரளிதரனும் கலந்து கொண்டார். இப்போட்டிக்கு முன்பு வரை 22 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருந்த முரளிதரன் அதில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கையின் ருமேஷ் ரத்நாயகேவை (73 விக்கெட்டுகள்) பின் தள்ளி, இலங்கை கிரிக்கெட் அணியின் அப்போதைய அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக முன்னேறினார்.

முத்தையா முரளிதரன்

ஆஸ்திரேலிய- இலங்கைக்கு எதிரான அந்த கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. பாக்ஸிங் டே போட்டியின், இரண்டாவது நாளில், ஆஸ்திரேலிய அணியின் நடுவரான, டாரோல் ப்ரூஸ் ஹையர், “முரளி பந்து வீசுவதற்குப் பதிலாக, பந்தை எறிந்து கொண்டிருக்கிறார்,” என்று குற்றம் சாட்டி, முரளியின் பந்தை no ball  என்று அறிவித்தார். இதே போன்று, 1996- ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய போதும், முரளி வீசிய 3 ஓவர்களில், 7 முறை no ball வீசியதாக அறிவித்தனர். இது முரளிக்கு மட்டுமல்லாமல், இலங்கை அணி, முரளியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

எதற்காக முரளியை மட்டுமே டார்கெட் செய்கிறார்கள்? என்றெல்லாம் கேள்விகள் வரத்தொடங்கின. கிரிக்கெட்டைப் பொறுத்த வரை ஐசிசி- யின் முடிவே தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், ஐசிசி முரளிதரனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையும் முரளிக்கு சாதகமாகவே அமைந்தது. இது மக்களிடையே ஒரு ஆறுதலை ஏற்படுத்தியது. 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் BCCI இவரின் பந்து வீச்சு முறை சரியாக உள்ளது என்று அறிவித்து, விளையாட அனுமதித்தது.

 “சும்மா இருந்த சிறுத்தைய சீண்டி பாத்தாச்சு. இனிமேல் தாக்குதல் தான்.” என்பதுபோல இதைத் தொடர்ந்து 1996- ல் நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் ஒன்றிணைந்து நடத்தின. இதில் இறுதி போட்டி வரை முன்னேறிய இலங்கை அணி, பாகிஸ்தானில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, 1997-ல் நடைபெற்ற ஹாமில்டன் டெஸ்ட் சீரிஸின் இரண்டாவது இன்னிங்ஸில்  நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஸ்டீபென் ஃப்ளெம்மிங்கை வீழ்த்தி தனது 100- ஆவது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார்.

1998-ல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், முதல் முறையாக ஒரே போட்டியில், பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த முதல் இலங்கை அணி வீரர் என்ற பெருமைக்கு ஆளானார். தனது 300- ஆவது விக்கெட்டை 58- ஆவது டெஸ்ட் போட்டியில் எடுத்தார்.

முரளிதரன்

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை முரளி தான் ஸ்பெஷல். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது ஒரு சவாலான விஷயம். அந்த சவாலையும் ஏற்றுக்கொண்டு, தனது திறமையின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனால்தான் இவரின் வெற்றியை குறிப்பிடும் விதமாக, இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து தயாரித்த படத்திற்கு ‘800’ என்று பெயரிட்டுள்ளனர். இங்கிலாந்தில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் கிரிக்கெட் உலகின் பைபிள் என்றழைப்படும் ‘விஸ்டன் இதழ்’, முரளிதரனை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்று குறிப்பிட்டுள்ளனர். 2007-ல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 700- ஆவது விக்கெட்டை எடுத்து, ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவானான ஷேன் வார்ன்-க்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற பெருமை பெற்றார்.

இவரை கௌரவிக்கும் விதமாக இலங்கையிலுள்ள பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை, ‘முத்தையா முரளிதரன் கிரிக்கெட் அரங்கம்’ என்று அன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷே மாற்றம் செய்தார். ஒருவேளை இது முரளிதரனை அரசியலில் ஈடுபடுத்துவதற்கான முன்னேற்பாடாக இருக்கக்கூடுமோ? முரளிதரன் அரசியலில் ஈடுபடபோகிறார் என்றெல்லாம் பேச்சுகள் பரவி வந்தன. ஆனால் இதற்கெல்லாம் பதில் தரும் விதமாக தான் நிச்சயமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்தார். 

மேலும் முத்தையா முரளிதரன் 2010- ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற CSK அணியின் முக்கிய பந்து வீச்சாளராக அங்கம் வகித்தார். 2010- ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ப்ரக்யான் ஓஜாவை வீழ்த்தி, தன் 800- ஆவது டெஸ்ட் விக்கெட்டை பதிவு செய்தார். இதுவே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு உச்சபட்ச சாதனையாகக் கருதப்படுகிறது.  மேலும் அந்த போட்டியே முத்தையா முரளிதரனின் கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. 2011-ல் நடைப்பெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக 2010-ல்  முரளி அறிவித்தது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின் 2011-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முரளிதரனின் கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்தது. இலங்கை அணி இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் வீழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரனின் சாதனைகள்:

விளையாடியுள்ள உலகக்கோப்பை போட்டிகள்- 31

விளையாடியுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டிகள்- 341

விளையாடியுள்ள முதல் தர போட்டிகள்- 444

தனது கிரிக்கெட் வாழ்க்கை காலகட்டத்தில், முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 22 முறை ten wickets haul எடுத்த புகழும் இவரையே சாரும். BCCI- ன் சிறந்த பந்து வீச்சாளர்களின் தரப்பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக 1,711 நாட்கள், முதலிடத்தில் நீடித்தார். இப்படி இவரின் சாதனைகளை பார்த்து அனைவரும் வியந்து போகும் பொழுது, சர்வ தேச அரங்கில் தான் பந்து வீசுவதற்கு பயந்த ஒரே வீரர் இந்தியாவைச் வீரேந்திர ஷேவாக் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல சவால்களை சந்தித்தாலும், தன்னை குற்றம் கூறிய ஆஸ்திரேலிய அணி மீண்டும் முரளிதரனை பந்துவீச்சு பயிற்சியாளராக பயிற்சி அளிக்க அழைத்தனர். இதை இவரும் பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டு, இதன்மூலம் அவர்கள் தன் திறமையை மதிக்கின்றனர் என்றும் கூறி பயிற்சியாளராகவும் ஆஸ்திரேலிய அணிக்குச் சென்றார். அதே ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஸ்டீவ் வாக், முத்தையா முரளிதரனை பந்து வீச்சின் டான் ப்ராட்மேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

விஜய் சேதுபதி-முத்தையா முரளிதரன்

இப்படி கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல், 2004- ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில், இலங்கையில் “நற்குண முன்னேற்ற அமைப்பு” (Foundation of Goodness) என்பதை 1999-லேயே தொடங்கி, அதன்மூலம் தற்போது இலங்கையில் 10,000 குழந்தைகளுக்கு இலவச கல்வி வாய்ப்பை வழங்கி வருகிறார். 

‘800’ படத்தில் முதலில் விஜய் சேதுபது நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், சில தரப்பினர்களின் வற்புறுத்தல்கள் காரணமாக அவர் இதிலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதரவளிக்கும் விதமாக முரளியும், “நல்ல நடிகர்களின் எதிர்காலம் இதனால் எதுவும் பிரச்சனைகளுக்கு உள்ளாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் நான் அவரை இதிலிருந்து விலகிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் கூறியிருக்கிறார். கிரிக்கெட் வீரராக மட்டுமே அனைவரும் அறிந்திருந்த முத்தையா முரளிதரனின் மறுபக்க வாழ்க்கையும், அவர் சந்தித்த சவால்களும், பிரச்சனைகளும் படமாக்க பட்டுள்ளதால், ‘800’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.