“என்னைப் பேச அழைத்ததே நல்ல படங்களை எடுத்திருக்கிறேன் என்ற தெம்பைக் கொடுக்கிறது"- மாரி செல்வராஜ்

திருநெல்வேலியில் தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறையால் ‘ ‘தமிழம்’ என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. 

திருநெல்வேலியில் தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறையால் ‘ ‘தமிழம்’ என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது.  அதில் சிறப்பு விருந்திரனராக ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்  கலந்துகொண்டார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர் தனது வாழ்க்கைப் பயணத்தை முன்வைத்து சில அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

மாரிசெல்வராஜ்

” இந்த கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இங்கு  படிக்க முடியாமல் போய்விட்டது. எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகவும், நேர்மையாகவும் பயன்படுத்தி நல்ல நிலைமைக்கு இன்று வந்திருக்கிறோம்.  இந்த மேடையில் உள்ள எல்லோரும் நிறைய படித்தவர்கள், மேலானவர்கள். ஆனால் அவர்களை எல்லோருக்கும் தெரியவில்லை. மாரிசெல்வராஜ் எனச் சொன்னதும் எல்லோருக்கும் தெரிகிறது என்றால் நான் கலைவழி இயங்குவதாலும், அறம்  சார்ந்து பேசுவதாலும்தான். நான் என்ன ஆகப்போகிறேன்,  என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் இருந்த என்னையே கலை இந்த அளவிற்கு மாற்றி இருக்கிறது.

தனிமையைக்  கொண்டாடுங்கள். சின்னச் சின்ன துண்டு பேப்பரைக்கூட எடுத்து படிப்பேன். புத்தகம் படிக்கும்போது எல்லோரும் என்னைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று திட்டுவார்கள். ஆனால் நான் படித்த புத்தகங்கள்தான் என்னை இந்த அளவிற்கு மாற்றி இருக்கிறது. மனிதர்களோடு பேச வேண்டும். சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்.  நாம ஜெயிக்கிறோம் தோக்குறோம் என்பது முக்கியமல்ல.

மாரி செல்வராஜ்

நாம் நினைத்த மாதிரி யாரையும் காயப்படுத்தாமல், தொந்தரவு செய்யாமல் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்.  இப்படியான மேடைகளில் என்னை பேச அழைத்ததே நான் நல்ல படங்களைதான் எடுத்திருக்கிறேன் என்கிற ஒரு தெம்பை எனக்கு கொடுக்கிறது. அதுவும் மாணவர்களிடம் பேசுவதற்கு அழைத்தாலே சரியான இடத்திற்குத்தான் போய்க் கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம்” என்று மனநிறைவோடு பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.