மும்பை: இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பு, கடந்த 2022 – 23 நிதியாண்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.10 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து, கடந்த நிதியாண்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.10 சதவீதமாக இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டான 2021 – 22ல் 7.20 சதவீதமாக இருந்தது.
குடும்பங்களின் வருடாந்திர கடன் பொறுப்புகள், கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் 3.8 சதவீதமாக இருந்தது.
நிதிப் பொறுப்புகளால் கணக்கிடப்படும் குடும்பங்களின் கடன்கள், கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2020 – 21 நிதியாண்டில் 22,800 கோடி ரூபாயாகவும், 2021 – 22ல் 16,960 கோடி ரூபாயாகவும், 2022 – 23ல் 13,760 கோடி ரூபாயாகவும், குடும்பங்களின் நிகர சொத்துக்கள், படிப்படியாக குறைந்து வந்துள்ளன.
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, குடும்பங்களின் வருவாய் சரிந்துள்ளதே, சேமிப்பு குறைந்துள்ளதற்கும், கடன் வாங்குதல் அதிகரித்திருப்பதற்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement