மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் சிறை செல்ல வேண்டியது வரும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் கலைச்செல்வி, உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் தாக்கல் செய்த மனு: அச்சம்பட்டி நடுநிலைப் பள்ளியில் கடந்த 2001 முதல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நிர்வாக பிரச்சினை காரணமாக 2003-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். பின்னர் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தேன். என்னை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு, பதவி உயர்வு, நிலுவை தொகை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படாததால் 2021-ல் கலைச்செல்வி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை 3 மாதத்தில் நிறைவேற்றப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனராக இருந்த அறிவொளி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதன் பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கலைச்செல்வி மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி நேரில் ஆஜரானார். மனுதாரரின் கோரிக்கை கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, மனுதாரர் 2019-ல் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்ட போது மனுதாரரின் கோரிக்கையை 3 மாதத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி உரிய காலத்தில் நிறைவேற்றப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனர். இதனை ஏற்க முடியாது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இதுபோன்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் பேச வேண்டியதில்லை. அது அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதை நிறைவேற்றுவதான் அதிகாரிகளின் கடமை. இதில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் துணை போக வேண்டாம் என்றார்.
பின்னர் நீதிபதி, பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவொளியிடம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத உங்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினார். அதற்கு அறிவொளி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தவறுதான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். இனி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவேன் என்றார்.
இதையடுத்து நீதிபதி, தமிழக அரசின் கீழ் 56 துறைகள் உள்ளன. இதில் பள்ளிக்கல்வித் துறையில் தான் நூற்றுக்கும் மேற்பட்ட நீதிமன்ற மனுக்கள் தாக்கலாகின்றன. இத்துறையில் உள்ள அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. வருங்காலங்களில் நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் நிறைவேற்றாவிட்டால் அதிகாரிகள் கண்டிப்பாக சிறை செல்ல வேண்டியது வரும். அறிவொளியின் மன்னிப்பை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால், எதிர்காலத்தில் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு இல்லாத அளவுக்கு நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.