
24 மணி நேரத்திற்குள்….புதிய சாதனையை படைத்தது 'லியோ' டிரைலர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் டிரைலர் நேற்று மாலை யு டியுபில் வெளியானது. வெளியான நிமிடத்திலிருந்து இதுவரையிலும் டிரைலரை இடைவிடாமல் பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
அதனால், 24 மணி நேரத்திற்குள்ளாகவே புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவந்த புதிய படங்களின் டிரைலர்களில் விஜய் நடித்து வெளிவந்த 'பீஸ்ட்' டிரைலர் 24 மணிநேரத்தில் 29.08 மில்லியன் பார்வைகைளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. தனது சாதனையை தானே முறியடித்துள்ளார் விஜய்.
22 மணி நேரத்திற்குள்ளாகவே அந்த சாதனை முறியடிக்கப்பட்டு 'லியோ' டிரைலர் தற்போது 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 2.5 மில்லியன் லைக்குகளும் டிரைலருக்குக் கிடைத்துள்ளது.
தெலுங்கு டிரைலர் 5 மில்லியன் பார்வைகளுடனும், கன்னட டிரைலர் 6 லட்சம் பார்வைகளுடனும், நேற்றிரவில் தாமதமாக வெளியான ஹிந்தி டிரைலர் 6 மில்லியன் பார்வைகளுடனும் இருக்கிறது. மொத்தமாக 41 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது 'லியோ' டிரைலர்.