இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிகரெட் வாங்குவதற்கான அதிகாரபூர்வ வயதை ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு வருடம் உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார்.
`இங்கிலாந்தில் இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய காரணங்களில் புகைபிடிக்கும் பழக்கமும் ஒன்றாக உள்ளது’ என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. அதோடு புகைபிடிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்தும் வருகிறது.

ரிஷி சுனக், புதன்கிழமை சிகரெட் வாங்குவதற்கான சட்டபூர்வ வயதை உயர்த்தும் கொள்கையை அமல்படுத்த முன்மொழிந்தார். புகைபிடிக்கும் வயதை ஆண்டுதோறும் ஒரு வருடமாக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார்.
புதன்கிழமையன்று கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் ரிஷி சுனக் பேசியபோது, “ஒவ்வொரு ஆண்டும் சிகரெட் விற்பனை வயது 18 வயதில் இருந்து உயரும். தற்போது 14 வயதுள்ள சிறுவனால் சிகரெட்டை வாங்க இயலாது.
புகைபிடிப்பதால் பக்கவாதம், இதய நோய், டிமென்ஷியா மற்றும் பிரசவம் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரிக்கிறது. புற்றுநோய் இறப்புகளில் நான்கில் ஒரு மரணம் புகைப்பிடிப்பதால் நிகழ்கிறது.
புகைபிடிப்பதில் பாதுகாப்பான நிலை என்று ஏதும் இல்லை. 1970-களில் இருந்து புகைபிடிக்கும் விகிதம் குறைந்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தில் இன்னும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
தற்போது 18 முதல் 24 வயதுக்குட்பட்ட ஒன்பது பேரில் ஒருவர் புகைபிடிப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நம்முடைய குழந்தைகளுக்கு நாம் சரியானதைச் செய்ய விரும்பினால், பதின்ம வயதினர் சிகரெட் பிடிப்பதை முதலில் நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
ஐந்தில் நான்கு பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை 20 வயதிற்குள் தொடங்கியுள்ளனர். பின்னர், பெரும்பான்மையானவர்கள் இந்த பழக்கத்தில் இருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடிமையாகிவிட்டதால் இந்த முயற்சியில் இருந்து பலர் தோல்வியடைகிறார்கள்.
நாங்கள் புகைபிடிக்கும் வயதை 18 ஆக உயர்த்தியபோது, அந்த வயதினரில் புகைபிடித்தல் பாதிப்பு 30 சதவிகிதமாகக் குறைந்தது.
புகைபிடிக்கும் பழக்கத்தால் நமது நாட்டிற்கு ஆண்டுதோறும் 17 பில்லியன் பவுண்டுகள் செலவாகிறது. இது தேசிய சுகாதார சேவைக்கு அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.
புற்றுநோய் இறப்புகளை நான்கில் ஒரு பங்காகக் குறைக்கவும், அந்த அழுத்தங்களைக் கணிசமாகக் குறைக்கவும், நம் குழந்தைகளைப் பாதுகாக்கவும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது, நாங்கள் அதைச் செயல்படுத்த வேண்டும்.
இதன் மூலம் அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்காமல் வளர முடியும். எம்.பி.க்கள் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படி சிகரெட் பிடிப்பதற்கான வயதை ஆண்டுதோறும் உயர்த்துவதன் மூலம் சில வருடங்களுக்குப் பின்னர் இறுதியில் யாராலும் சிகரெட்டை வாங்க முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சிகரெட் மற்றும் புகையிலை பொருள்களை வாங்குவதற்கான சட்டபூர்வ வயது லேபர் கட்சி அரசாங்கத்தால் 2007-ல் 16 வயதில் இருந்து 18-ஆக உயர்த்தப்பட்டது. ஜூலை 2007 முதல் இங்கிலாந்து முழுவதும் உள்ள உணவகங்கள், விடுதிகள் மற்றும் பெரும்பாலான பணியிடங்கள், வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்தத் திட்டம் இங்கிலாந்தில் பலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஒவ்வொரு வருடமும் புகைபிடிப்பதற்கான அதிகாரபூர்வ வயதை அதிகரிப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!