புதுடில்லி,சமூக வலைதளங்களின் வாயிலாக கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை வழங்குவதாக கூறி, 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலுக்கு வெளிநாட்டு தொடர்பு இருந்தது அம்பலமாகியுள்ளது.
சமூக வலைதளம்
நம் நாட்டில் மொபைல் போன் பயன்படுத்துவோரை குறிவைத்து நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
சமூக வலைதளங்களில், ‘லிங்க்’ ஒன்றை அனுப்பி, அதன் வாயிலாக கடன் வழங்குதல், வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி, மோசடிகள் நடத்தப்படுவதாக சி.பி.ஐ.,க்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், சென்னை, பெங்களூரு உட்பட நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. இதையடுத்து, நம் நாட்டில் உள்ள இடைத்தரகர்கள் வாயிலாக நடத்தப்பட்ட மோசடியில், வெளிநாட்டு நபர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துஉள்ளது.
இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிரிப்டோகரன்சி, பணத்தை இரட்டிப்பாக்குதல், கடன் வழங்குதல் என பல்வேறு மோசடிகள் கடந்த ஓராண்டாக நாடு முழுதும் நடந்து வந்துள்ளன.
விசாரணை
இது தொடர்பாக பல்வேறு நபர்களிடம் இருந்து, 357 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பண மோசடி குறித்து நடந்த விசாரணையின் இறுதியில், பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான, 16 கணக்குகள் முடக்கப்பட்டன.
இதில், வெளிநாட்டு நபர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது-.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்