பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.8 கோடி ரொக்கமும், கணக்கில் வராத ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களும் சிக்கின. இதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கு 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி டி.கே.சிவகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையடுத்து டி.கே.சிவகுமார் தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நடராஜன், டி.கே சிவகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 3 மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்யுமாறு சிபிஐக்கு கெடு விதித்து உத்தரவிட்டார்.