ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது..!

புதுடெல்லி,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்திருந்தார். அதே சமயம் காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது கடினம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்துக் கொண்டு 6-வது சிறப்பு விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை டெல்லி புறப்பட்டது. இந்த நிலையில் அந்த விமானம் தற்போது டெல்லி வந்தடைந்துள்ளது. இந்த சிறப்பு விமானம் மூலம் 2 நேபாள குடிமக்கள் உட்பட 143 பேர் டெல்லி வந்தடைந்தனர்.

இதனை மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.