புனேவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோதின. இதில் இலங்கை அணியை 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சேஸிங் செய்து அற்புதமான வெற்றி பெற்றுள்ளது, ஆப்கானிஸ்தான் அணி.
முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பௌலிங்கைத் தேர்வு செய்திருந்தது. இந்த ஆட்டம் முழுவதுவே ஆப்கானிஸ்தான் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொரு செயலிலும் அத்தனை திட்டமிடலுடன் ஆடியிருந்தனர். ஆப்கானின் டாஸ் தேர்வைத் தொடர்ந்து, பேட்டிங்கில் இலங்கை அணியின் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஜோடி களத்திற்கு வந்தது. கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியைப் போலவே, இப்போட்டியிலும் சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தியிருந்தார், நிசங்கா. இந்த ஓப்பனிங் இணை தொடக்கத்தில் நிதானமாகவே ஆரம்பித்திருந்தது.

முதல் ஓவரில் 4 ரன்கள் வர, 5 ஓவர்கள் வரை பெரிய ஷாட்கள் எதுவும் அடிக்கவில்லை. 6வது ஓவரில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை வேகப்படுத்த நினைத்த கருணாரத்னே, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் குசல் மென்டிஸ் களமிறங்கி இயன்ற வரை சிறப்பாக விளையாடி வந்தார். பவர் – ப்ளேயில் அதிக ரன்கள் கொடுக்காமல் சிறப்பாகவே கையாண்டிருந்தது, ஆப்கான். பவர்-பிளே முடிவுக்குப் பின்னர் வந்த ஸ்பின்னர்களும், அவ்வளவு எளிதாக ரன்கள் கொடுத்துவிடவில்லை. இதையெல்லாம் விவேகத்துடன் எதிர்கொண்டு நிதானமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியிருந்தது,நிசங்கா- மென்டிஸ் இணை.
முதல் 15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 66 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அடுத்து சில ஓவர்களில் இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. அரைசதம் அடிக்கும் முனைப்பில் விளையாடிக் கொண்டிருந்த நிசங்கா, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் வீசிய பந்தை கட் ஷாட் அடிக்க முயற்சித்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். 46 ரன்கள் எடுத்திருந்த இவர், 19வது ஓவருடன் புறப்பட்டுச் சென்றார். இந்த இரண்டு விக்கெட்டுளையும் ஆப்கான் அணியின் ஸ்பீட் பௌலர்கள் எடுத்திருந்தனர். முன்பே குறிப்பிட்டது போல, ஆப்கானிஸ்தான் அணியின் ஒவ்வொரு முடிவிலும் திட்டமிடலை வெளிக்கொணரும் வகையில் அற்புதமாக பந்து வீசியிருந்தனர்.
அடுத்து வந்த சமரவிக்ரமா, குசல் மென்டிஸுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால், இவர்கள் இருவரின் விக்கெட்டையும் சொல்லி வைத்து எடுத்தார், முஜீப் உர் ரஹ்மான். இவரின் ரைட் ஆர்ம் பிரேக் ஸ்பின்னிங்கில் இந்த இரண்டு பேரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தப் பிட்ச்சின் தன்மைக்கு ஏற்றவாறு பௌலிங்கில் அடிக்கடி மாற்றம் கொண்டு வந்தார், ஆப்கான் கேப்டன் ஷாஹிடி. 30வது ஓவரில் சமரவிக்ரமா ஆட்டமிழக்கும் போது, அணியின் ஸ்கோர் 139 ரன்கள் தான்.

இதற்குப் பிறகு வந்த அசலங்காவின் விக்கெட்டை ஃபாசல்ஹக் ஃபரூக்கி எடுத்திருந்தார். பௌலிங்கிலும் ஃபீல்டிங்கிலும் கலக்கியிருந்தனர். ஸ்பின்னர்களில் ரஷித்கானும் முஜுப் உர் ரஹ்மானும் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா இருவரும் சில ஓவர்களுக்கு நின்று விளையாடிவிட்டு ஆட்டமிழந்தனர். கடைசி சில ஓவர்களுக்கு வந்த தீக்ஷனா, 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 43 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 200 ரன்களைக் கடந்தது. ஆனால், 47வது ஓவரில் தீக்ஷனாவும் ஃபருக்கி பௌலிங்கில் கிளீன் போல்ட் ஆனார். திறம்பட செயல்பட்ட ஆப்கான் ஃபீல்டர்களால் துஸ்மந்தா சமீரா மற்றும் கசுன் ரஜிதா இருவரும் ரன் அவுட் ஆகினர். இறுதியாக 49.3 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது, இலங்கை அணி.
குறிப்பாக ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜுப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ரஷித்கான் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்து அசத்தியிருந்தனர்.

அடுத்த இன்னிங்ஸிற்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸாட்ரன் இருவரும் களமிறங்கினர். இதையடுத்து முதல் ஓவரை வீச வந்தார், மதுஷங்கா. மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரஹ்மானுல்லா குர்பாஸ், அடுத்த பந்திலேயே போல்ட் அவுட்டானது தான் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரின் விக்கெட்டைத் தொடர்ந்து, ரஹ்மத் ஷா விளையாட வந்தார். முதல் ஓவரே ஒரு பேட்ஸ்மேனை இழந்துவிட்ட நிலையில், பொறுமையாக விளையாட்டைத் தொடக்கினர். ஐந்து ஓவர்கள் முடிவில் 20 ரன்கள் எடுத்தது, ஆப்கான். ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் நல்ல முன்னேற்றம் தென்பட, ரன்களின் வருகை அதிகரித்தது.
சிங்கிள், இரண்டு என ரன்கள் வர, கூடவே பவுண்டரிகளும் வரத் தொடங்கியிருந்தது. இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை இலங்கை அணியால் உடைக்க முடியவில்லை. பவர் பிளேயின் முடிவில் 50 ரன்கள் வந்தன. அடுத்தடுத்த ஓவர்களுக்கு பௌலிங்கும் ஃபீல்டிங்கும் மாறியதே தவிர ஆட்டத்தில் மாற்றம் இல்லாமலே இருந்தது.

இப்படியே ஆட்டம் தொடர, 17வது ஓவரில் தான் விக்கெட் விழுந்தது. தில்சன் மதுஷங்கா வீசிய ஓவரில், இப்ராஹிம் ஸாட்ரன் அவுட்டானார். அடுத்ததாக வந்த அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிடி, பொறுப்புணர்வுடன் ஆட்டத்தைத் துவக்கினார். ஆப்கான் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத்திலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸுக்கான முகாந்திரம் தென்பட்டது. ஒவ்வொரு பார்ட்னர்ஷிப்பிற்கான முன்னெடுப்பிலும் அணியை தூக்கிச் சுமக்கத் தயாராகியிருந்தனர். 22 ஓவர்களுக்குப் பிறகு 100 ரன்களைக் கடந்தது. அதே சமயம், இலங்கை அணியின் பௌலிங்கிலும் தீக்ஷனாவை தவிர்த்து, ஸ்பின்னர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த இடத்தில் வெல்லாலகே இல்லாதது மிகப்பெரிய மிஸ்ஸிங். இப்படியாக எதிரணியிடம் இருந்த குறைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஷாஹிடி- ரஹ்மத் ஷா இணை விளையாடியது. 25வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதத்தைக் கடந்தார், ரஹ்மத் ஷா. இவர், கசுன் ரஜிதா வீசிய 28வது ஓவரில் ஆட்டமிழந்ததும் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் களமிறங்கினார்.

ஷாஹிடியும் ஓமர்ஸாயும் விளையாடிய இன்னிங்ஸ் வேறு ரகமாக இருந்தது. பௌலிங்கில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஓமர்ஸாய், பேட்டிங்கில் கவர் ட்ரைவ், ஸ்ட்ரைட் ட்ரைவ் என ஸ்டைலிஷான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியிருந்தார். இதோடு சேர்த்து சிக்ஸர்களும் பறந்தன. 33வது ஓவரில் ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது. ரஹ்மத் ஷா ஆடிய இன்னிங்ஸில் அமைந்த மெட்டு, இவரின் இன்னிங்ஸில் முழு மெலோடி பாடலாக உருமாறியிருந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொரு பந்தையும் கணித்து, பவுண்டரி ஷாட்டாக அடித்திருந்தார். 40 ஓவர்களில் 200 ரன்கள் வர, அடுத்தடுத்த ஓவரில் இருவருமே அரைசதம் அடித்திருந்தனர். இவர்களின் 100+ பார்ட்னர்ஷிப் ரன்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இறுதியாக, ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதோடு சேர்த்து மொத்தம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் வீறுநடை போட்டு வருகின்றது. இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது, ஆப்கானிஸ்தான் அணி. இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என மூன்று முக்கியமான போட்டியிலும் அசத்தலான வெற்றியைப் பெறுவதற்குக் காரணம், வீரர்களின் முழு ஒத்துழைப்பு தான்.

ஃபீல்டிங், பௌலிங்கிலும் இளம் வீரர்களின் பங்களிப்பு என்பது நுட்பமானது. பேட்டிங்கில் ரஹ்மனுல்லா குர்பாஸ், ஓமர்ஸாய் மற்றும் இப்ராஹிம் ஸாட்ரன். பௌலிங்கில் முஜீப் உர் ரஹ்மான், ஃபாசல்ஹக் ஃபரூக்கி, ரஷித் கான், நூர் அஹமத் என பல இளம் வீரர்கள் கலக்கி வருகின்றனர். அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவது என்பது சந்தேகம் தான் என்றாலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு இதுவே மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்.
வாழ்த்துகள் ஆப்கானிஸ்தான்!