தேனி: தொடர் மழையினால் தேனி வாரச்சந்தை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் நுகர்வோர் வருகையின்றி இன்றைய வியாபாரம் வெகுவாய் பாதித்தது.
தேனி பெரியகுளம் சாலையில் ஒவ்வொரு சனி அன்றும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தின் 2-வது பெரிய வாரச்சந்தை என்ற சிறப்பை பெற்றிருந்தது. அந்தளவுக்கு இங்கு காய்கறி மட்டுமல்லாது ஆடு, மாடு, உரம், மருந்து, அரிவாள், கத்தி, இரும்பு, அலுமினிய பாத்திரங்கள், விதைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்கப்பட்டன. தேனி மட்டுமல்லாது சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருவர்.
குடியிருப்பு பகுதிகளுக்குள் காய்கறி மற்றும் தள்ளுவண்டி கடைகள் அதிகரித்ததில் இருந்தே வாரச்சந்தை விற்பனை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இதனால் தேனி வாரச்சந்தையில் 500 கடைகளுக்கு மேல் இருந்த நிலையில் தற்போது 200 கடைகளே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் சந்தை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி இன்றைய வியாபாரம் வெகுவாய் பாதித்தது.
இதுகுறித்து வாரச்சந்தை சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவர் அய்யாச்சாமி கூறுகையில், “தரை வாடகை வசூல் தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 3 மடங்கு கட்டணம் உயர்ந்து விட்டது. இங்கு அடிப்படை வசதி இல்லாததால் மழைக்கு சேறும், சகதியுமாக மாறி வியாபாரம் பாதித்துவிட்டது. பிற்பகலில்தான் அதிக வியாபாரம் நடக்கும். அப்போதும் மழை பெய்து கொண்டே இருந்ததால் இன்றைய விற்பனை வெகுவாய் பாதித்தது. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” என்றார்.