உலகக்கோப்பையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் DLS முறைப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் மட்டுமல்ல இலங்கை, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்கின்றன.
பெங்களூருவின் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடந்திருந்தது. காயம் காரணமாக பல போட்டிகளில் ஆடாமல் இருந்த கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் மீண்டும் அணிக்குள் வந்து கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்தான் டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தார். பெங்களூர் மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்பதாலும் ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாலும் பாபர் அசாம் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும். அவர் எதை நினைத்து எடுத்தாரோ அதுவே நடந்திருந்தது.

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 401 ரன்களை எடுத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரின் பேட்டிங்குமே ஹைலைட்டாக அமைந்தது.
ரச்சின் ரவீந்திராவுக்கு 23 வயதுதான் ஆகிறது. ஆடும் முதல் உலகக்கோப்பை இதுதான். உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். தொடர்ச்சியாக சீராக அதே செயல்பாட்டை அப்படியே தொடரவும் செய்தார். இந்தப் போட்டியிலும் 94 பந்துகளில் 108 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். ஆரம்பத்திலிருந்தே நியூசிலாந்து அணியின் ரன்ரேட் 6-ஐ சுற்றியே நிலையாக இருந்ததற்கு ரச்சின் ரவீந்திராவின் இன்னிங்ஸே மிக முக்கிய காரணமாக இருந்தது. கேன் வில்லியம்சனை மேதை என ஏன் அழைக்கிறோம் என்பதற்கான காரணம் இந்தப் போட்டியிலும் புலப்பட்டிருந்தது.

பல மாதங்கள் கிரிக்கெட் ஆடாமல் இருந்து நேரடியாக உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில்தான் வில்லியம்சன் களமிறங்கியிருந்தார். அந்தப் போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். ஆனால், ஆடிக்கொண்டிருக்கும் போதே கட்டைவிரலில் காயம் ஏற்பட ரிட்டையர் ஹர்ட் ஆகியிருந்தார். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தப் போட்டியில்தான் வில்லியம்சன் மீண்டும் களமிறங்கினார். இந்தப் போட்டியிலும் சதத்தை நெருங்கி 79 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அவுட் ஆகியிருந்தார்
ரவீந்திராவுடன் இணைந்து 180 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். இவர்கள் இருவரும் அவுட் ஆன பிறகும் டேரில் மிட்செல், சாப்மன், சாண்ட்னர், க்ளென் பிலிப்ஸ் ஆகியோரும் அதிரடியாக ஆட நியூசிலாந்து அணி 400 ரன்களைக் கடந்தது. பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ராஃப், ஹசன் அலி, ஷாகீன் அஃப்ரிடி என அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் 80 ரன்களுக்கு மேல் கொடுத்து சொதப்பியிருந்தனர்.
பாகிஸ்தான் அணிக்கு 402 ரன்கள் டார்கெட். ஒப்பனர் அப்துல்லா சஃபீக் டிம் சவுத்தியின் ஓவரில் சீக்கிரமே அவுட் ஆகியிருந்தார். ஆனால் நம்பர் 3-ல் வந்த பாபர் அசாம் ஃபகர் ஷமானுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். ஃபகர் ஷமான் வழக்கம்போல அதிரடியில் கலக்கி சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். பாபர் அசாம் நின்று செட்டிலாகி கூட்டணிக்கு உதவினார்.
10 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி 75 ரன்களை எடுத்து வேகமாக இலக்கை நோக்கி முன்னேறியது. பாகிஸ்தான் நன்றாக ஆடிக்கொண்டிருக்க 21 ஓவர்களில் 159 ரன்களை எடுத்திருந்த சமயத்தில் மழை குறுக்கிட்டது. ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட 41 ஓவர்களில் 342 ரன்கள் என டார்கெட் மாற்றியமைக்கப்பட்டது.

மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் என்பதால் பாகிஸ்தான் இன்னும் வேகம் கூட்டியது. ஃபகர் ஷமான் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். சில நிமிடங்களிலேயே மீண்டும் மழை குறுக்கிட்டது. 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை எடுத்திருந்தது. மழை நிற்காததால் DLS முறைப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. மழை என்பதைத் தாண்டி, களநிலவரத்தை முன்னரே கணித்து, DLS கணக்கையும் மனதில் வைத்து தேவைப்படும் நேரத்தில் அதிரடி காட்டி, சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறது பாகிஸ்தான். 126 ரன்கள் அடித்திருந்த ஃபகர் ஷமானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் வென்றதால் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளும் இன்னமும் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன. தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.