பெய்ரூட்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அடைய முடியாத இலக்கினை அடைய இஸ்ரேல் கடந்த ஒரு மாத காலமாக முயற்சித்து வருவதாக ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். லெபனான் நாட்டின் தலைநகரில் திரளான மக்கள் கூடியிருந்த இடத்தில் காணொலி மூலம் அவர் பேசி இருந்தார்.
கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. தொடர்ந்து தெற்கு இஸ்ரேலில் பகுதியில் இருந்த மக்களில் நூற்றுக்கணக்கான பேரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதையடுத்து இஸ்ரேல் தரப்பில் பாலஸ்தீனத்தின் காசாவை குறிவைத்து பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காசா தான் ஹமாஸ் அமைப்பினர் இயங்கும் பகுதியாக உள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் சையத் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
“அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பின்னால் பலத்த திட்டமிடல் உள்ளது. ரகசியம் காத்தது தான் இந்த திட்டம் வெற்றி பெற காரணம். மேலும், இஸ்ரேலின் பலவீனத்தை இது காட்டுகிறது. இதில் எங்களது பங்கு எதுவும் இல்லை.
சுமார் ஒரு மாத காலமாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், ராணுவ ரீதியாக அதில் எந்தவொரு சாதனையையும் இஸ்ரேல் தரப்பு பெறவில்லை. காசாவில் அடைய முடியாத இலக்கை இஸ்ரேல் விரட்டுகிறது. பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே இஸ்ரேல் பிணைக் கைதிகளை திரும்ப பெற முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.