கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ‘ஐஎன்எஸ் கருடா’ விமான தளத்தில் இருந்து ‘சேட்டக்’ ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று மதியம் புறப்பட்ட சில நொடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது.
இதில் ஓடுபாதையில் இருந்த ஊழியர் ஒருவர், ஹெலிகாப்டரின் சுழலும் இறக்கைகள் (ரோட்டார் பிளேடுகள்) தாக்கி உயிரிழந்தார். இவர், மத்தியபிரதேசத்தை சேர்ந்த யோகேந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த விமானி உள்ளிட்ட இருவர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக கடற்படை தளத்தில் உள்ள சஞ்சீவனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பராமரிப்பு சோதனையின்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.