“நவம்பர் 8-ம் தேதிக்குள் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம்” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களின் மூன்று படகுகளைப் பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை. இதனால் கடலுக்குச் செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள், அந்தப் பகுதி மீனவர்கள்.
இலங்கை சிறையிலுள்ள 64 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி நடந்த போராட்டத்தை இடையில் நிறுத்திய மீனவர்கள், ஐந்து நாள்களுக்கு முன்பு மீண்டும் கடலுக்குச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினரால் துரத்தியடிக்கப்படனர்.

இந்த நிலையில், மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நடத்திவருகிறார்கள்.
ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மீனவர்களின் கோரிக்கைகளைக் கேட்டார். பின்பு மீனவர்கள் மத்தியில் பேசியவர், “இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட 64 மீனவர்களையும், 10 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நவம்பர் 8-ம் தேதிக்குள் முயற்சி எடுக்காவிட்டால், ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என்றார்.

மீனவர்களை மீட்க தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்திவரும் நிலையில், நடவடிக்கைகள் தாமதமாகிவருவதால், ராமேஸ்வரம் வட்டாரத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தை நடத்திவருகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஆயிரக்கணக்கான மீனவத் தொழிலாளர்கள் வருமானமின்றி இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.