சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களை மீண்டும் மேடை ஏற்ற முயற்சி: நடிகர் நாசர் அறிவிப்பு

புதுச்சேரி: சங்கரதாஸ் சுவாமிகள் எழுதி தந்த நாடகங்களை மீண்டும் மேடை ஏற்றும் முயற்சியை செய்து வருகிறோம். இவ்வாண்டு அவரது நாடக விழா சிறப்பாக நடக்கும் என்று நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் கூறியுள்ளார்.

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 101வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்ட்டது. புதுச்சேரி கலை, இலக்கிய பெருமன்றம் சார்பில் ஈஸ்வரன் கோவிலில் இருந்து கருவடிக் குப்பம் மயானத்திலுள்ள அவரது நினைவிடம் வரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தை ஏந்தி நாடகக் கலைஞர்கள் ஊர்வலமாக சென்றனர். மயானத்திலுள்ள நினைவிடத்தில் புதுச்சேரி அரசு சார்பில் அஞ்சலியை அமைச்சர் லட்சுமி நாராயணன் செலுத்தினார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நாடகக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ் வரலாற்றில் நிகழ்கலையில் நவீனத் துவத்தை கொண்டு வந்தவர் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்தான். ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்த பல்வேறு நாட்டுப் புற நிகழ்கலைகளை ஒன்று சேர்த்து புதுவடிவம் உருவாக்கினார். மேடை நாடகங்களுக்கு அவர்தான் தந்தை. நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் இருந்து வந்தவர்களால்தான் இன்றைய சினிமா ஆளுமை உள்ளது.

தமிழில் சினிமா உருவாகும் போது அவரது குழுவில் இருந்து வந்தோர்கள்தான் சினிமாவில் கோலோச்சினார்கள். நிகழ்கலையின் தந்தையான அவர் விட்டுபோன பணிகளை, அவர் எழுதித் தந்த நாடகங்களை மீண்டும் மேடை ஏற்றும் முயற்சியை செய்து வருகிறோம். இவ்வாண்டு அவரது நாடக விழா சிறப்பாக நடக்கும்” என நாசர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.