தி.மு.க இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார். மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றவிருக்கிறார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தி.மு.க-வின் இளைஞர் அணி மாநாட்டை முன்னிட்டு, இரு சக்கர வாகனப் பிரசார பேரணியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஹெல்மெட் அணிந்துகொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி, கட்சியின் இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்த இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியில் 188 இரு சக்கர வாகனங்கள் பங்கேற்கின்றன.
இந்தப் பேரணி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லவிருக்கிறது. மொத்தம் 13 நாள்களில், 8,647 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் இந்தப் பேரணி, வரும் 27-ம் தேதி சேலத்தில் நிறைவடையவிருக்கிறது.














