“இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும்” – மாலத்தீவின் புதிய அதிபர்

மாலே: இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என மாலத்தீவின் புதிய அதிபர் முகமது மூயிஸ் முறைப்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு மாலத்தீவு மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வசம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் முறையாக தெரியவில்லை. தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ள புதிய அதிபர் முகமது மூயிஸ், அந்நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவர். இவர் 2013 முதல் 2018 வரையிலான ஆட்சி காலத்தில் சீனாவுடன் இணக்கமாக பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாட்டு படைகள் வெளியேற்றப்படும் என முகமது மூயிஸ் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சிறப்பு தூதர் ஷென் யிகினை அதிபர் முகமது மூயிஸ் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போது தங்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பல ஆண்டுகளாக சீன அரசு வழங்கி வரும் பங்களிப்புக்கு அதிபர் முகமது மூயிஸ் நன்றி தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தான் இந்திய ராணுவம் தங்கள் நாட்டில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.