அமெரிக்காவில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய இளைஞர் மரணம்; கொலையா… நடந்தது என்ன?

அமெரிக்காவில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய இளைஞர், மர்மமான முறையில் காரில் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி உயிரிழந்ததாக அறியப்படும் இந்தியர் ஆதித்யா அட்லாகா. இவர், கடந்த 2018-ல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் இந்திய இளைஞர் மரணம்

அதைத் தொடர்ந்து, 2020-ல் டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உடலியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இத்தகைய சூழலில், கடந்த நான்காண்டுகளாக சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரியில் மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் பிரிவில் முனைவர் பட்டம் படித்துவந்தார். இந்த நிலையில், நவம்பர் 9-ம் தேதி வெஸ்டர்ன் ஹில்ஸ் வையாடக்டில் காருக்குள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறார் ஆதித்யா அட்லாகா.

காரின் பக்கவாட்டிலுள்ள ஒரு கண்ணாடியில் குறைந்தது மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறது. அப்போது அந்த வழியாகச் சென்ற ஓட்டுநர்கள் 911 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு போலீஸிடம் இதனைத் தெரிவித்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து UC மருத்துவ மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆதித்யா அட்லாகா, இரண்டுநாள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ மையத்திலேயே உயிரிழந்தார். இதனை விவரித்த சின்சினாட்டி போலீஸ் லெப்டினன்ட் ஜொனாதன் கன்னிங்ஹாம், சம்பவம் நடந்த அன்று காலை 6:20 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தெரிவித்தார்.

ஆதித்யா அட்லாகா

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, “ஒரு கல்லூரியாகவும், ஆதித்யா அட்லாகாவின் கல்வி இல்லமாகவும், அவரின் குடும்பத்தினருக்கும், அவரை நண்பராகவும், சக ஆராய்ச்சியாளராக அறிந்தவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறது. அதேசமயம். இதுதொடர்பாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இதுவரையில் எந்தவொரு நபரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸார் தொடர்ந்து இதில் விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.