ஆசியா நன்கொடையாளர்கள்: போர்ப்ஸ் பட்டியலில் 3 இந்தியர்களுக்கு இடம்

புதுடெல்லி: போர்ப்ஸ் ஆசியா இதழின் நன்கொடையாளர்கள் பட்டியலில் நந்தன் நிலகனி, கே.பி.சிங் மற்றும் நிகில் காமத் ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் ஆசியா இதழ், வருடாந்திர 17-வது நன்கொடையாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தரவரிசைப்படுத்தப்படாத இப்பட்டியலில், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் கடந்த ஆண்டு அதிக நன்கொடை வழங்கிய 15 பேர் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக தனது சொந்த நிதியை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக செயலுக்காக தனது நேரத்தை செலவிட்டவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில், இன்போசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் நிலகனி, டிஎல்எப் கவுரவ தலைவர் கே.பி.சிங் மற்றும் ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இதில் நந்தன் நிலகனி தான் படித்த மும்பை ஐஐடி-க்கு ரூ.320 கோடி நன்கொடை வழங்கினார். கடந்த 1999 முதல் இதுவரை அந்த கல்வி மையத்துக்கு இவர் ரூ.400 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான டிஎல்எப் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய கே.பி.சிங் (92), ரூ.730 கோடிநன்கொடை வழங்கி உள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இளம் கோடீஸ்வரர் நிகில் காமத் (37) இப்பட்டியலில் முதல்முறையாக இணைந்துள்ளார். எரிசக்தி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ள இவர், ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.