சென்னை வெள்ளம் எதிரொலி: ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழக அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும்டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுக ளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க இருந்தனர். இந்த கார் பந்யத்துக்கு தடை விதிக்கக் கோரி, மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா? ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.