சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், தென்னிந்தியாவில் (தெலங்கானா) மீண்டும் தோல்வியடைந்த பா.ஜ.க, தனக்கான வெற்றி இடம் வட மாநிலங்கள்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வகையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் இருந்த ஆட்சியையும் கைவிட்ட காங்கிரஸ், தெலங்கானாவில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

முன்னதாக, இந்த ஐந்து மாநிலத் தேர்தலுக்காக, தான் அங்கம் வகிக்கும் `இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகளில் தலைகாட்டாமல் வந்தது காங்கிரஸ். இதனாலேயே, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் போன்றோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர்.
இருப்பினும் தேர்தலில் மட்டும் கவனம் செலுத்திவந்த காங்கிரஸ், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று (டிசம்பர் 3) காங்கிரஸ், டிசம்பர் 6-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தும் வகையில், எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பல்வேறு காரணங்களால், டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்தனர்.

இதனால், ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸும் ஒத்திவைத்தது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூற்றுப்படி, டிசம்பர் 17-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், `இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன்’ என்று கூறியதாகப் பரவிய தகவல் வதந்தி என நிதிஷ் குமார் விளக்கமளித்திருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று வதந்திகள் பரவின. இது முட்டாள்தனமான ஒன்று. எனக்கு அப்போது காய்ச்சல் இருந்ததால் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அடுத்த கூட்டம் எப்போது நடந்தாலும் நிச்சயமாகக் கலந்துகொள்வேன்” என்று கூறினார்.

அதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ஆலோசனைக் கூட்டம் பற்றி முன்னாடியே எனக்குத் தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம்தான், ராகுல் காந்தி அழைத்து இதுபற்றிக் கூறினார். எனவே அவர்கள் கூட்டம் எப்போது என்று முடிவுசெய்கிறார்களோ, அப்போது கலந்துகொள்வேன்” என்றார்.