கொல்கத்தா: கொல்கத்தா நகரில் வசித்து வரும் இளைஞரை திருமணம் செய்ய பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 45 நாட்கள் விசாவில் வந்துள்ளார் இளம் பெண். வாகா எல்லை வழியாக செவ்வாய்க்கிழமை அன்று இந்தியா வந்துள்ளார்.
கராச்சியை சேர்ந்தவர் ஜவேரியா கானும். இவருக்கும் இந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்த சமீர் கானுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2018-ல் இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஜவேரியவை முதல் முறையாக பார்த்ததும் சமீருக்கு அவரை பிடித்துள்ளது. அதன் பிறகு சமீரின் தாயார், ஜவேரியா குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். திருமண ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இருந்தும் திருமணத்துக்காக ஜவேரியா, இந்தியா வருவதற்கான விசா கிடைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருந்துள்ளது. விசா கோரிய அவரது விண்ணப்பம் இரண்டு முறை இந்திய தரப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கரோனா தொற்று காரணமாக அவர் இந்தியா வருவதில் சிக்கல் நீடித்துள்ளது. இதையெல்லாம் கடந்து தற்போது அவருக்கு 45 நாட்கள் விசா கிடைத்துள்ளது. விசா பெறுவதில் அவருக்கு பத்திரிகையாளர் ஒருவர் உதவி செய்துள்ளார்.
“இருவீட்டார் சம்மதத்துடன் எங்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. விசா கிடைப்பதில் தாமதம் இருந்தது. தற்போது விசா வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜனவரியில் எங்கள் திருமணம் நடைபெற உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்தியாவில் நான் கால் எடுத்து வைத்த அந்த தருணம் முதல் எனக்கு கிடைத்து வரும் வரவேற்பை கண்டு ஆனந்தத்தில் திளைத்துள்ளேன்” என ஜவேரியா தெரிவித்துள்ளார்.