புதுடெல்லி: இந்துத்துவா கொள்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், “திமுகவின் சனாதன எதிர்ப்புக்கு காங்கிரஸும் மறைமுக ஆதரவளிக்கிறது” என்ற பிரச்சாரத்தை பாஜக வரும் மக்களவைத் தேர்தலிலும் எழுப்பத் தயாராகிறது.
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் கிடைத்த பலன், இதர இந்தி மாநிலங்களிலும் வரும் மக்களவைத் தேர்தலில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பாஜக உள்ளது. இதன் காரணமாக, எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இணக்கம் காட்டினாலும் இண்டியா கூட்டணியால் வெற்றி பெற முடியாது என்ற கருத்து உருவாகத் தொடங்கியுள்ளது. எனவே, இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸில் குரல்கள் எழுவதாகத் தெரிகிறது. இதற்காக காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் தமது தலைமைக்கு நெருக்கடி அளிக்கத் தொடங்கி விட்டனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியதாவது:
சனாதனம் என்பது இந்திய அரசியல் அமைப்பின் குறிப்புகளில் இல்லை என்றாலும் அது, பொதுமக்களின் வாழ்க்கை முறையாக உள்ளது. இதில் உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமணம் எதிர்ப்புஉள்ளிட்ட பலவும் இருந்தன. ஆனால், பலவும் மறைந்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு, பெரியார் போன்ற சமூக சீர்திருத்தத் தலைவர்கள் பலரின் உழைப்பும், அரசியல் சட்டங்களும் காரணமாகி வருகின்றன.
இஸ்லாம், சீக்கியம், கிறிஸ்தவம்என எந்த மதமும் புண்படும்படி பேசுவது தவறு என உணர்ந்துவிட்டக் காலம் இது. இச்சூழலில் ஒருமாநில அமைச்சராகவும், முதல்வரின் மகனாகவும் உதயநிதி பேசியது மாபெரும் தவறு. இதற்கு, உதயநிதி கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து என்று மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார்உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் முன்பே கூறி விட்டனர். இதனை ராகுல், சோனியா, பிரியங்கா, கார்கே போன்ற முக்கியத் தலைவர்கள் காங்கிரஸ் சார்பில் இதுவரை கூறவில்லை.
இதனால் பாஜக பெறும் பலனைதடுக்க, திமுகவுடனான உறவைமுறிப்பதை தவிர காங்கிரஸுக்கு வேறு வழியில்லை. பாஜகவிடம் இருந்து விலகிய அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது காங்கிரஸுக்கு புதிதல்ல. திமுகவால் தங்கள் மாநிலங்களில் தங்களுக்கும் இழப்பு ஏற்படும் என இண்டியா கூட்டணியின் பிற கட்சிகளும் அச்சம் அடைந்துள்ளன. திமுகவுடனான உறவு முறிவால் ஏற்படும் பலன் காங்கிரஸ் உட்பட இண்டியா கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, காங்கிரஸ் தலைமையும் சனாதன எதிர்ப்பு விவகாரத்தின் இழப்பை உணரத் தொடங்கி விட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் திமுக எம்.பி. டிஎன்வி செந்தில்குமாரின் பேச்சு சர்ச்சையானது. இதில் அவர், பாஜக வென்ற 3 மாநிலங்களில் கோமியம் அருந்துகிறார்கள் என்ற பொருளில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கிளம்பிய எதிர்ப்பால் அவரது கருத்து மக்களவை குறிப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டது.
திமுக எம்.பி. செந்திலுக்கு பாஜக எம்.பி. மீனாட்சி லேக்கி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சனாதன விவகாரத்துடன் சேர்த்து எதிர்ப்பு தெரிவித்தனர். உத்தரபிரதேச காங்கிரஸின் முக்கியத் தலைவரான துறவி ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரும் கண்டித்தனர். இதனால் அஞ்சிய காங்கிரஸ் தனது மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் மூலமாக திமுக தலைமையிடம் உடனடியாகப் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து எம்.பி. செந்தில்குமார் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டதுடன் விளக்கமும் அளித்தார்.
இதன் பிறகும் பாஜக இப்பிரச்சினையை விடுவதாக இல்லை. பாஜக தலைவரும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அனுராக் தாக்குர், “வட இந்தியர்கள் மீது இவர்கள் விமர்சனங்கள் வைப்பது புதிதல்ல. இதற்கு முன்பும் பலமுறை இதுபோல் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது இவர்களது வழக்கமாகி விட்டது.
இதை இந்தமுறை துவக்கியது ராகுல் காந்தி. திமுகவை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏன்? இந்த இருவரும் இணைந்திருப்பது அவசியமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் நேற்று முன்தினம் நடத்த முயன்ற இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ரத்தானது. இக்கூட்டம் மீண்டும் டிசம்பர் 19-ல் நடத்த திட்டமிடப்படுகிறது. இக்கூட்டத்தில் திமுகவின் சனாதன எதிர்ப்பு விவகாரமும் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.