பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களைப் பாதுகாத்தது. – பிரதமர் தினேஷ் குணவர்தன

இன்னும் சில மாதங்களில் கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று (06) நடைபெற்ற “புதியதோர் கிராமம் – பதியதோர் தேசம்” தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கம்பஹா மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –

கடந்த ஆண்டு நாம் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம். அரசியல் ரீதியாக நன்மை தீமைகள் இருந்தாலும், நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி சர்வதேச அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது இது முதற் தடவையல்ல. உலக வங்கியிடம் செல்வதும் முதற் தடவையல்ல. ஒவ்வொரு அரசாங்கமும் அந்த நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளது.

இத்தகையதொரு பொருளாதார வீழ்ச்சியை மலேசியாவும் சந்தித்தது. அனைத்து பொதுத் துறைகளையும் மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை புத்துயிர்பெறச் செய்து இன்று மலேசியாவில் ஒரு வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தன. அதன்போது எடுக்கப்பட்ட முதல் முடிவு எனக்கு நினைவிருக்கிறது. கிரீஸ் முதலில் அதன் அரச ஊழியர்களில் அரைவாசி பேரை வீட்டிலேயே இருக்கச் சொன்னது. ஓய்வூதியம் வழங்க முடியாது என்று கூறப்பட்டது. நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.

நாங்கள் ஒரு அரசாங்கமாக அந்தத் தீர்வை நோக்கி நகரவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் உறுதியாக கூறினோம். அதன்படி, அனைத்து அரச ஊழியர்களும் தங்கள் சேவையை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

14000 கிராம சேவை பிரிவுகள் உள்ளன. கிராம உத்தியோகத்தர் சேவைக்கான சேவை பிரமாணக் குறிப்பை இன்னும் சில மாதங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டை தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் முன்னுரிமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பல அரச ஊழியர்கள் உள்ளனர். மாவட்ட அரசாங்க அதிபரின் அபிவிருத்திக் குழுத் தலைவர்களின் அறிவுறுத்தல்களின்படி அபிவிருத்திக் குழுத் திட்டத்தை ஒரு மாவட்டம் என்ற வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் கட்டுப்பட்டுள்ளனர். கிராமிய மட்டத்திலான அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவது அவசியம். இதன் போது பல முக்கிய உண்மைகள் தெரியவந்துள்ளன. கடந்த ஆண்டை விட ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவும் உற்பத்தியை அதிகரிக்கும் என நம்புகிறோம். உணவு உற்பத்தி அல்லது பிற விவசாயப் பயிர்கள் அல்லது மூலப்பொருட்கள் அல்லது முதலீடுகள் போன்ற எதுவாகவும் இருக்கலாம். 2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது.

ஒவ்வொரு கிராமத்தினதும் தகவல்களைச் சேகரித்து அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதில் நாம் இப்போது ஈடுபட வேண்டும். புதியதோர் கிராமம் புதியதோர் தேசம் நிகழ்ச்சித்திட்டம் உற்பத்தியை அதிகரிக்க, புதிய மற்றும் பல்வேறு துறைகளை உருவாக்க, அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய மையமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உணவுத் துறையில் தன்னிறைவு அடைய ஆரம்பித்துள்ளோம். ஒவ்வொரு கிராமமும் எல்லாவற்றிலும் தன்னிறைவு அடைய முடியாது.

அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்திற்கு உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து முதியோர்களுக்கு விசேடமானதொரு பகுதி ஒதுக்கியுள்ளன. முதியோர்களுக்கான உதவித்தொகையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். இதற்காகவே வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான செலவு தலைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மாவட்ட செயலாளர் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் தகவல்களைக் கொண்டு வந்து தகவல்களை ஒருங்கிணைக்க முடியும். எனவே, இத்தகவலைக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோய்வாய்ப்பட்டோர் அனைவரையும் உள்ளடக்க தலையிட வேண்டும். நாங்கள் அரசாங்க சேவையில் இருக்கிறோம்.

கல்வியை முடித்து வெளியேறும் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத் தொழில் மற்றும் பயிற்சிகளை அளிக்க வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் பற்றி நினைவூட்டுகிறேன்.

அரசாங்கத்தினால் அனைத்தையும் செய்ய முடியாது, எனவே தனியார் துறையின் ஆதரவு தேவை. வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்து உருவாக்கப்படும் கூட்டு முயற்சிகள் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும். அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு சிந்தித்து செயற்பட வேண்டும்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, நளின் பெர்னாண்டோ, மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான ஜனக வக்கும்புர, அசோக பிரியந்த, இந்திக்க அனுருத்த, சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப், கோகிலா குணவர்தன, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, மிலான் ஜயதிலக, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, மேல்மாகாண செயலாளர் பிரதீப் யசரத்ன, கம்பஹா மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.