காசாவில் உடனடி போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் வாக்களித்தது இந்தியா

காசா,

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. ஆரம்பத்தில் வான் வழியாக மட்டும் காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் பின்னர் கடல் மற்றும் தரைவழியாகவும் தாக்குதல்களை விரிவுப்படுத்தியது.

அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ஹமாசை ஒழிக்கும் வரையில் எத்தனை மாதங்கள் ஆனாலும் போரை தொடருவோம் என சூளுரைத்துள்ளது.

இஸ்ரேலின் ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காசா மீதான இஸ்ரேல் போரில் அங்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர். இது தவிர இஸ்ரேலின் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலும், நோய் தொற்று ஏற்படும் அபாயத்திலும் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன.

இந்நிலையில் காசாவில் உடனடி போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் இந்தியா வாக்களித்துள்ளது. முன்னதாக காசாவில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் கோரி ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்’ என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கிற்கான ஐக்கிய நாடுகள் பொதுசபையின் (UNGA) அவசரகால அமர்வில் இந்தியா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

இந்தியா உட்பட 153 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரியா உட்பட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன மற்றும் அர்ஜென்டினா, உக்ரைன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகின.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.