`2 நிமிட மேகியைவிடக் குறைவான நேரம்'- தேர்தல் ஆணையர் நியமன மசோதா விவாதம் குறித்து பிரியங்கா சதுர்வேதி

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) மசோதா, 2023 தொடர்பான விவாதத்தின்போது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை, இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகியுடன் குறிப்பிட்டு, ராஜ்ய சபாவில் பிரியங்கா சதுர்வேதி கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்பது, மத்திய அமைச்சரவைப் பரிந்துரைக்கும் நபர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதாக இருக்கும்.

இந்திய தேர்தல் ஆணையம்

இதனால், மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசு, தங்களுக்கு தோதானவர்களைத் தேர்தல் ஆணையர்களாக நியமிப்பதாகவும், தேர்தல் ஆணையமும் ஒருசார்பாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கில், `தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாகப் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் தலைமையிலான குழு அமைக்கப்படும். அந்தக் குழு பரிந்துரைக்கும் நபர்களைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார்’ என்று கடந்த மார்ச்சில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் மூவரில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாகப் பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவரை இடம்பெறச் செய்யும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நேற்று நடைபெற்றக் கூட்டத்தில், ராஜ்ய சபாவில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தது.

பிரியங்கா சதுர்வேதி

அதில், மசோதாமீது தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது, எழுந்து பேசிய உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி பிரியங்கா சதுர்வேதி, குறைவான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதை, இரண்டு நிமிட மேகியுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது குறித்து, பிரியங்கா சதுர்வேதி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி நூடுல்ஸ் பற்றி விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியத் தேர்தல் ஆணையர் மசோதாமீது, கருத்தைப் பதிவுசெய்ய இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரம் தரப்படுகிறது. இன்னும் நேரம் கொடுத்திருக்கலாம்.

நியாயமான தேர்தல்கள், வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பதைவிடவும், தேர்தல் ஆணையரின் பணி பெரியது. அரசியல் கட்சிகளில் இருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குமான பொறுப்பும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவான 2:1 மசோதா நியாயமற்றது. மேலும், ஜனநாயகம், அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று பதிவிட்டிருந்தார்.

இருப்பினும், நேற்று ராஜ்ய சபாவில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) மசோதா, 2023 நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.