ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்!!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி (Marc Andre Franche) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினரிற்கு மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாகவும் இதன்போது குறித்த குழுவினர் அறிந்துகொள்ளும் வண்ணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களினால் அளிக்கையொன்று செய்யப்பட்டது.

இதன்போது மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், சுற்றுலாத்துறை, மட்டக்களப்பு வாவியை ஆளப்படுத்தி வெள்ளத்தடுப்பினை மேற்கொள்வது உள்ளிட்ட மேலும் பல துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான குறைபாடுகள் மற்றும் அவற்றை நிவர்த்திப்பதற்காக எதிர்பார்க்கும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினரிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கிற்கு சில பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளதாகவும், அதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தம்மால் உதவ முடியுமென ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

இதன்போது மாவட்டத்தின் தேவைப்பாடுகள் அடங்கிய திட்ட அறிக்கையொன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களினால் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விசேட கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வடகிழக்கிற்கான சமாதான ஐக்கியத்திற்கான இணைப்பாளர் தாறக்க எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர்.ஜதீஸ்குமார், வீ.நவநீதன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.