“தேமுதிக பொதுச் செயலாளர் பதவி ‘முள் கிரீடம்’ எனக்கு!” – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சென்னை: “எனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொரு முள் கிரீடம். உண்மையாகவே நான் பதற்றமாகவும், மன அழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப் பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி இருக்கிறீர்கள்” என்று சென்னை திருவேற்காட்டில் நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர் – பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முழுமையாக வாசிக்க > தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்

பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலாத விஜயகாந்த் கூட்டத்தில் பேசியது: “இன்றைய உலகில், இனிமேல் நமது தலைவரைப் போல ஒருவர் பிறந்து வந்தால்கூட, தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் போன்ற மனிதரை, புனிதரை யாரும் பார்க்க முடியாது. அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சி சாதாரண கட்சி இல்லை. அவருடைய லட்சியம், கொள்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. தலைவர் விஜயகாந்த், எதற்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தாரோ, அந்த லட்சியத்தை கொள்கையை எப்போது நாம் அடைவோம். தமிழகத்தில் தேமுதிக ஆட்சி அமைக்கும் நாள்தான், நமது தலைவரின் லட்சியமும், கொள்கையும் வென்றதற்கான அர்த்தம். நான் இதை வெறும் வார்த்தைகளுக்காக சொல்லமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

நான் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன். என்னோடு இணைந்து நீங்கள் அனைவரும் உண்மையாக, ஒற்றுமையாக உழைக்க தயாரா என்பதுதான் என்னுடைய கேள்வி. காரணம், பலர் என் முன்னால் ஒன்று பேசுகிறீர்கள். நான் இல்லாதபோது பலர் வேறு ஒன்று பேசுகிறீர்கள். அனைத்தும் எனக்கு தெரியும். யார் யார் என்ன பேசுகிறீர்கள், என் முதுகுக்கு பின்னால் என்ன பேசுகிறீர்கள் என்று எல்லாம் எனக்கு தெரியும். அது தெரிந்தும், நான் அமைதி காப்பது எதற்காக தெரியுமா? தலைவர் விஜயகாந்த் ஆரம்பித்த இந்தக் கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற உறுதிதானே, தவிர வேறு எதுவுமே கிடையாது.

இன்று எனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொரு முள் கிரீடம். உண்மையாகவே நான் பதற்றமாகவும், மன அழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப்பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் எதற்கு அஞ்சமாட்டேன். சவால் என்று வந்தால், சவால்தான்.

உங்கள் அனைவரையும் மிகப் பெரிய பதவிகளில் அமர வைத்து பெருமைப்படும் நாள்தான், நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் பொதுச் செயலாளர் பதவிக்கு கிடைக்கப்போகும் பெருமை. எப்படி, 2011-ல், எதிர்க்கட்சித் தலைவராக தலைவருடன் 29 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்கு சென்றீர்களோ, அந்த வரலாற்றை மீண்டும் திரும்ப வரவைப்பேன். அதற்காக உங்களை நான் கேட்டுக் கொள்வது எல்லாம், உண்மையாக, நேர்மையாக தேமுதிகவுக்காக உழைக்கக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.