தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, விக்டோரியா நகரைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலைப்பார்த்த இவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு, வீட்டிலிருந்து வந்தார். இவரின் மனைவி நித்யா (39), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

விக்டோரியா நகரிலுள்ள அப்பார்ட்மென்ட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை நடந்து வந்திருக்கிறது. உறவினர்கள் சிலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் சமாதானம் செய்திருக்கின்றனர். அப்போது சுந்தர் கணேஷ் `எனக்கும், என் மனைவிக்கும் நடக்கும் சண்டையில், இடையே பேசுவதற்கு நீங்கள் யார்?’ என சத்தம் போட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று இருவருக்கும் மீண்டும் சண்டை நடந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து சுந்தர் கணேஷ் வீட்டிலிருந்த டிவி உள்ளிட்ட பொருள்களை உடைத்துச் சேதப்படுத்தியிருக்கிறார். அதே வேகத்தில் அரிவாளால் நித்யாவின் முதுகு, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியிருக்கிறார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியது. குழந்தைகள் கண்முன்னே சுந்தர் கணேஷ் வெறித்தனமாக நடந்து கொண்டதில், குழந்தைகள் நடுங்கியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து கையில் அரிவாளுடன் வேகமாகக் கீழ் பகுதிக்கு வந்த சுந்தர் கணேஷ், காரை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றிருக்கிறார்.

பரிசுத்தம் நகரில் கீழத்திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (35), கோபி ஆகிய இருவரும் டெய்லி பால் நிலையம் என்ற பெயரில், பால் கடை நடத்தி வருகின்றனர். பால் கடையில் காரை நிறுத்திய சுந்தர் கணேஷ், கடைக்குள் இருந்த தாமரைச்செல்வன், கோபி ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பித்துச் சென்றார். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த நித்யா, தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், தாமரைச்செல்வன், கோபி ஆகிய இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுந்தர் கணேஷ் சென்ற கார் செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் எதிர் திசையில் வந்த டிப்பர் லாரிமீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபியும் உயிரிழந்தார். அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தெற்கு, செங்கிப்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சிலரிடம் பேசினோம். “சுந்தர் கணேஷ், நித்யா ஆகிய இருவரும் நாஞ்சிக்கோட்டை சாலையில் சுமார் 50 லட்சம் மதிப்பில் வீடு ஒன்று வாங்கியிருக்கின்றனர். அந்த வீட்டை விற்பனை செய்வது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் எனச் சொல்கிறார்கள். கடந்த மூன்று தினங்களாக சுந்தர் கணேஷ் கடும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. சுந்தர் கணேஷ் வெட்டிய பால் கடையிலிருந்துதான், அவரது வீட்டுக்கு பால் விநியோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதனால் எதுவும் தகராறு ஏற்பட்டு, பால் கடையில் உள்ளவர்களையும் வெட்டினாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும்” என்றனர்.