ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்த நிலையில், அங்கு ராணுவம் தீவிர தேடுதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச், ரஜவுரி மாவட்டத்தில் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூன்று நபர்கள் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த இரண்டு எல்லையோர மாவட்டங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சந்தேக நபர்கள் சித்திரவதை செய்யப்படும் வீடியோ பரப்பப்பட்டு மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. களநிலவரம் குறித்து ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்காத நிலையில், வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மூத்த ராணுவ, காவல்துறை, அரசு அதிகாரிகள் சூழ்நிலையை கண்காணித்து வருகின்றனர். மாவட்டங்களில் பதற்றமான இடங்களில் அமைதியை நிலைநாட்டும் வகையில், அங்கு போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் தேரா கி கலி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த புதன்கிழமை பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் தொடர்ந்துவந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக வியாழக்கிழமை மாலையில் ஒரு லாரி மற்றும் ஒரு ஜீப்பில் கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ரஜவுரி எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தின் தாத்யார் மோர் என்ற இடத்தில் அந்த வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் இரண்டு வீரர்களின் உடல்களை சிதைத்தனர், அவர்களின் ஆயுதங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு தீவிரவாதிகளைத் தேடும் பணி நடைபெறுகிறது.
இந்தநிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூன்று பேரை ராணுவத்தினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்தனர். இறந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.