புதுடெல்லி: அயோத்தியின் ராமர் கோயில் திறப்புக்காக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) சார்பில் இந்திய அளவில் பிரச்சாரம் செய்யப்படவுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் 22 வரை நடைபெறும் இந்தப் பிரச்சாரம், ‘ஹர் ஷெஹர் அயோத்யா, கர் கர் அயோத்யா’ (ஒவ்வொரு நகரிலும் அயோத்யா, வீடுதோறும் அயோத்யா)’ எனும் பெயரில் நடத்துகிறது.
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலை, ஜனவரி 22-இல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இக்கோயில் மீதான பிரச்சாரம் நாடு முழுவதிலும் பரப்பப்படுகிறது. இப்பிரச்சாரத்தில், அயோத்தியில் ராமர் கோயில் போராட்டம் 1983 முதல் நடத்திய விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி), அதிக தீவிரம் காட்டுகிறது. பாஜகவின் தோழமை அமைப்பான விஎச்பி சார்பில் ராமர் கோயில் பிரச்சாரம் நாடு முழுவதிலும் செய்யப்படுகிறது. விஎச்பியின் பிரச்சாரக் கோரிக்கையை ஏற்று, சிஏஐடி வர்த்தகர்கள் அமைப்பும் தீவிரம் காட்டுகிறது. இந்திய அளவிலான இவர்களது பிரச்சாரத்துக்கு, ‘ஹர் ஷெஹர் அயோத்யா, கர் கர் அயோத்யா’ (நகரந்தோறும் அயோத்யா, வீடுதோறும் அயோத்யா)’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சிஏஐடியின் இப்பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, நாட்டின் அனைத்து மாநிலங்களின் வர்த்தகர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ’ஜனவரி 1 முதல் 22 வரை நாட்டின் அனைத்து வர்த்தகர்களும், நகரந்தோறும் அயோத்யா, வீடுதோறும் அயோத்யா எனும் பிரச்சாரத்தை துவக்க வேண்டும். இதில், தம் வாகனங்கள், வீடுகள் மற்றும் கடைகளில் அயோத்தி ராமர் கோயில் வடிவத்தை ஸ்டிக்கர், சுவரொட்டிகளாக ஒட்டி வைக்க வேண்டும். ராமர் கோயிலின் நினைவுகளை தம் வாடிக்கையாளர்கள் மனதில் பதிய வைக்க, அதன் வடிவத்தின் சிறிய, பெரிய சிற்பங்களை இலவசமாக அளிக்க வேண்டும். இப்பிரச்சாரத்தை தம் பகுதியிலுள்ள இதர சமூக, பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து வர்த்தகர்கள் செய்யலாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சிஏஐடியின் தேசியப் பொதுச்செயலாளரான பிரவீன் கண்டல்வால் மேலும் கூறுகையில், ’ராமர் கோயில் திறப்பு நாளை தீபாவளித் திருநாள் போல் கொண்டாட வேண்டி நாம் நமது ஆயிரக்கணக்கான உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்நாளில் ராமரின் பெயரிலான ‘ஷோபா யாத்திரை’ ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ரத யாத்திரைகளை வர்த்தகர்கள் நடத்த உள்ளனர். இதில் ராமர் பஜனைகள் செய்யப்பட்டு அதன்மூலம், அனைத்து வர்த்தகர்களும் ஒன்றிணைக்கப்படுவர்.
ஜனவரி 22 அன்று நாடு முழுவதிலும் வியாபாரிகள் தம் கடைகள், நிறுவனங்கள், அதை சுற்றியுள்ள கோயில்கள் மற்றும் பல பொது இடங்களை பலவர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்க உள்ளனர். அயோத்தியின் நேரலையை நாட்டின் பல முக்கிய இடங்களில் எல்இடி திரைகளை வைத்து பொதுமக்கள் பார்த்து மகிழச் செய்யவும் தயாராகிறார்கள்.’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தின் கோயில்கள் அனைத்திலும் ஜனவரி 14 முதல் 22 ஆம் தேதி வரை ஹனுமன் மந்திரங்கள் ஓத முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் செய்யவும் தனது உத்தரவில் முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். இந்த மந்திரங்கள் தொடர்ந்து இரவு, பகலாக ஜனவரி 22 வரை ஓதப்பட உள்ளன.