கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல மேஜிக்குகள் நிகழ்ந்தன. மாறுபட்ட கதைக்களத்தைப் புதுமுக இயக்குநர்கள் பார்வையாளர்களுக்குப் பரிசளித்தார்கள். அதுமட்டுமன்றி, பல புதுமுக நடிகர்களும் தங்களது முத்திரையை ஆழமாகப் பதித்தார்கள்.

சென்ற ஆண்டு, பெரிதும் பரிச்சயமில்லாத முகங்களாகத் தோன்றி தமிழ் சினிமாவில் இரண்டு வில்லன் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை பயமுறுத்தினர். ‘போர் தொழில்’ திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகர் சுனில் சுகதாவும், ‘சித்தா’ திரைப்படத்தில் அச்சமூட்டும் வில்லனாக நடித்திருந்த தர்ஷனும்தான் அந்த இரண்டு முக்கிய வில்லன்கள். தேர்ந்த நடிப்பால் வில்லனிசத்தை வெளிப்படுத்தித் தூள் கிளப்பியிருந்தனர். இவர்கள் இருவருடனான உரையாடலை பின்வருமாறு பார்க்கலாம்.
கேரளாவில் இருந்த சுனில் சுகதாவைத் தொடர்புகொண்டு பேசுகையில், “எனக்கு ‘போர் தொழில்’ முதல் தமிழ்த் திரைப்படம் கிடையாது. சமூத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியிருந்த ‘போராளி’ திரைப்படம்தான் நான் நடித்திருந்த முதல் தமிழ்த் திரைப்படம். அதில் கேரளாவைச் சேர்ந்த ஒருவராக நான் நடித்திருப்பேன். ‘போர் தொழில்’ திரைப்படத்தின் இயக்குநர் இத்திரைப்படத்திற்கு என்னை அழைத்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், இத்திரைப்படத்தின் கதாபாத்திரத்தைப்போல இதற்கு முன்பு நான் நடித்தது கிடையாது.
நான் மலையாளத்தில் 145-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், ‘போர் தொழில்’ கதாபாத்திரத்தைப்போல எவையும் இருந்ததில்லை. என்னைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை நான் இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடமே கேட்டேன். இந்தக் கதாபாத்திரத்திற்கான தேடலில் அவர் இறங்கியபோது எனது போட்டோவைப் பார்த்திருக்கிறார். அதன் பிறகு என்னைத் தேர்வு செய்ததாகக் கூறினார்.
இத்திரைப்படத்திற்காக இந்தக் கதையை வைத்தே ஒரு பைலட் படத்தை இயக்குநர் இயக்கியிருந்தார். அதனைப் பார்த்த பின்புதான் நான் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் முழுத் திறமையை அறிந்தேன். நான் இதுவரை செய்த கதாபாத்திரங்கள் நகைச்சுவைத் தன்மை படிந்தவையாக இருக்கும். பாதிரியாராகவோ, ஆசிரியராகவோ நடித்தால் அதற்கென ரோல் மாடல்கள் இருப்பார்கள். அதனை நடிப்பதற்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வேன். சீரியல் கில்லருக்கு எப்படி ரோல் மாடல் இருப்பார்கள்…” எனச் சிரித்துக்கொண்டவர், பின்னர் தொடர்ந்தார்.
“இயக்குநர் எனக்குச் சில புத்தகங்களைப் பரிந்துரை செய்தார். அதன் பிறகு பல சீரியல் கில்லர்களின் முழுநீள காணொலிப் பேட்டிகளை நான் பார்த்தேன். முதலில் ‘போர் தொழில்’ கதாபாத்திரம் குறித்துப் பலவற்றை எனக்கு இயக்குநர் எடுத்துரைத்தார். அந்தக் கதாபாத்திரத்தின் முழுமை எனக்குத் தெரியும். ஆனால், அதில் சிலவற்றைப் படத்தில் காட்சிப்படுத்தவில்லை. இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னை நான் தயார் செய்துகொண்டேன். நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்துவந்தவன். இதுபோன்று என்னைத் தயார்படுத்திக் கொள்ளும் முறை எப்போதாவதுதான் திரைப்படங்களில் நிகழும். சில ஆக்ஷன் காட்சிகள்தான் எனக்கு சவாலாக அமைந்தன.
நான் பெரும்பாலும் சண்டைக் காட்சிகளில் நடித்ததில்லை. இத்திரைப்படத்திற்காக சில ஒத்திகைகள் செய்து பார்த்தோம். இந்தத் திரைப்படம் வெளியான பின்பு தமிழகத்தில் என்னை அடையாளம் கண்டு பலர் பாராட்டினார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, ‘போர் தொழில்’ திரைப்படம் பிறமொழிகளுக்கு டப் செய்யப்பட்டதால் ஆந்திராவிலும் என்னை அடையாளம் கண்டு பாராட்டினார்கள். என்னுடைய கதாபாத்திரம் இப்படியான வேறுபட்ட கோணத்தில் அமைந்ததால் மலையாள சினிமாப் பார்வையாளர்கள் சர்ப்ரைஸாகி என்னைப் பாராட்டினார்கள்.
முதலில் எனது கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனத் திட்டமிட்டார்கள். அதனால் எந்தவொரு புரொமோஷன் பணிகளிலும் நான் பங்கேற்கவில்லை.
டீசர், டிரெய்லர், போஸ்டரில்கூட எனது கதாபாத்திரத்தைக் காட்சிப்படுத்தியிருக்கமாட்டார்கள். தமிழ் சினிமாவை நான் அதிக அளவில் கவனிப்பேன். எம்.ஜி.ஆர் நடித்திருந்த ‘ராமன் தேடிய சீதை’ திரைப்படம்தான் நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம். நான் தற்போது தமிழிலும் இரண்டு திரைப்படங்களில் நடித்துவருகிறேன். அதுகுறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும்” என்றார்.
பிறகு ‘சித்தா’ தர்ஷனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், “இயக்குநர் ஹரி சார்தான் என்னை முதன்முதல்ல அறிமுகப்படுத்தினார். ‘சாமி’ படத்துல நான் ஒரு சின்னக் கதாபாத்திரம் நடிச்சிருப்பேன். நான் நடிச்சிருந்த சீன் டிரெய்லரிலுமே வந்துச்சு. அப்படித்தான் என் பயணம் ஆரம்பமாச்சு. பிறகு அதே மாதிரி ஹரி சார் இயக்கத்துல உருவாகியிருந்த ‘அருள்’ படத்திலும் நடிச்சிருந்தேன். அதுக்கப்புறம் சூர்யா சார் நடிப்புல வெளியாகியிருந்த ‘வேல்’ திரைப்படத்திலும், விஷால் சாரோட ‘பூஜை’ திரைப்படத்திலும் நடிச்சிருந்தேன். ‘வேல்’ திரைப்படத்தோட ஷூட்டிங் 40 நாள்கள் நடந்தது. அப்போ சூர்யா சார் நல்லா சிரிச்சு ஜாலியா பேசுவாரு. இதுக்கெல்லாம் காரணம் ஹரி சார்தான். அவர்தான் என்னை இந்த ஹீரோக்கள்கூட நடிக்க வச்சாரு. இப்படி சின்னச் சின்ன ரோல் பண்ணிட்டிருந்தேன்.

பிறகு ‘பிச்சைக்காரன்’ படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல வந்திருந்த என்னோட சீன்களெல்லாம் எனக்கு ஒரு அடையாளத்தைத் தேடி தந்தது; இயக்குநர் சசி சாரை நான் மறக்கவே மாட்டேன். ‘சித்தா’ படத்தோட இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் அருண் குமார் தேடிட்டிருந்தாரு. அப்போ என்னைக் கூப்பிட்டு ‘ உங்களோட உருவம் தேவைப்படுதுன்னு’ சொல்லி ஆடிஷன் பண்ணினாங்க. அப்புறம் என்னைக் கூப்பிடவே இல்ல. நானும் அவரோட ஆபிஸுக்கெல்லாம் போய்க் கேட்டேன். அதுக்கப்புறம் ஒரு நாள் போன் பண்ணிக் கூப்பிட்டாங்க. ஸ்பாட்டுக்குப் போனதும் இயக்குநர் அருண் குமார், ‘இது வேற மாதிரியான கதை. பெர்பாமென்ஸ் லைவ்வாக இருக்கணும்’னு சொன்னார். சித்தார்த் சாரும் அதே மாதிரிதான் இயக்குநர் சொல்றதைப் பண்ணச் சொன்னார்.
அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை ரொம்பவே இயல்பாக நடிக்க வெச்சார். இயக்குநர் சொன்னதைத்தான் நான் பண்ணினேன். அப்போகூட அவர் சின்னச் சின்ன மாற்றங்கள் சொல்லி, ‘இந்த மாதிரி பண்ணுங்க’ன்னு சொல்வார். சினிமால நம்ம கதாபாத்திரத்திற்கு எப்படியான வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்குதுங்கிறதைப் பொறுத்துதான் நமக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும். அந்த வகையில் எனக்கு முதல்ல ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. இதுமட்டுமல்லாம, ‘குலு குலு’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திலும் நான் நடிச்சிருந்தேன். இந்த வருடம் ‘சித்தா’ படம் எனக்கு இப்படியான அடையாளத்தைத் தேடிக் கொடுத்திருக்கு. நானும் முதல்ல ‘இது வில்லன் கதாபாத்திரம், ஏதாவது நெகட்டிவ் ஆகிடுமோ’ன்னு நினைச்சு பயந்தேன்.

இயக்குநர் அருண் குமார் ரொம்பவே தெளிவாக இருந்தாரு. ‘சித்தா’ படம் வெளியானதும் தியேட்டர் விசிட் போனோம். நிறைய குழந்தைங்க என்கிட்ட வர்றதுக்கு பயந்தாங்க. நிறைய பேர் என் கதாபாத்திரம் மேல கோபப்பட்டாங்க. நான்கூட நிறைய பேர்கிட்ட இது நடிப்புதான்னு சொன்னேன். இந்த வரவேற்பைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.
‘சித்தா’ திரைப்படத்துக்கு நல்ல அடையாளம் கிடைச்சிருக்கு. இப்போ என்னை ஏற்கெனவே ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கிற கதாபாத்திரத்திற்கும் கூப்பிடுறாங்க. 2024-ல இன்னும் நல்ல கதாபாத்திரங்கள் வரும்னு நம்புறேன். இப்போ நான் அதிகமான படங்கள் பண்ணுறது முக்கியமில்ல. ரெண்டு, மூணு கதாபாத்திரங்கள் பண்ணுனாலும் நல்ல கதாபாத்திரமாகப் பண்ணுறதுக்கான முயற்சிகள் எடுக்கணும்” எனப் பேசி முடித்தார்.