உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், மதுரா அருகில் இருக்கும் விருந்தாவனில் நாட்டிலேயே முதன்முறையாக மாணவிகளுக்கான பிரத்யேக ராணுவப் பள்ளி கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
பள்ளியை திறந்து வைத்துப் பேசிய ராஜ்நாத் சிங், ”ராதா கிருஷ்ணரின் விருப்பப்படி இந்த சைனிக் பள்ளி திறக்கப்படுகிறது. கிருஷ்ணரை வழிபட வெளிநாட்டினர் கூட மதுராவிற்கு வருகின்றனர். அவர்களில் பலர் இங்கேயே தங்கி விடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் பேசிய பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ”ராணுவப் பள்ளியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துடன் ராணுவ பயிற்சியும் கொடுக்கப்படும். இப்பள்ளியில் 120 இடங்கள் உள்ளன. அதில் சேர ஜனவரி 21-ம் தேதி தேர்வு நடைபெறும். அதன் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பள்ளியின் மூலம் மதுரா, பெண்களால் அங்கீகரிக்கப்படும். சமூகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றால், பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் அது சாத்தியமில்லை. இதை அடைய நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
சமூகம் அதன் பழமைவாத சித்தாந்தத்திலிருந்து வெளியே வர வேண்டும். இளைஞர்கள் மத்தியில் ராணுவ ஒழுக்கத்தை கொண்டு வரவேண்டியது ராணுவப் பள்ளிகளின் பொறுப்பு. இதன் மூலம் நாடு முன்னெடுத்துச் செல்லப்படும். ஒவ்வொருவரும் நாட்டிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மதம், குடும்பம் மற்றும் சுயதேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு அனைத்து குடிமக்களும் உணர்ந்தால்தான் இந்தியா வளர்ந்த நாடு என்ற இலக்கை அடையும்” என்றார்