Mohammed Siraj: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரின் அட்டகாசமான பந்துவீச்சால் தென்னப்பிரிக்க அணி முதல் பேட்டிங்கில் நிலைகுலைந்துபோய் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எல்கர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது அவருடைய கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
கடந்த போட்டியில் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த எல்கர், மார்கிரமுடன் ஓப்பனிங் இறங்கினார். அவரை 4 ரன்களுக்கு போல்டாக்கி வெளியேற்றினார் சிராஜ். இதேபோல் மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான மார்கிரம் 2 ரன்களுக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் இரண்டு விக்கெட்டுகளையும் சிராஜ் கைப்பற்றி நிலையில் மூன்றாவது விக்கெட்டை ஜஸ்பிரித் பும்ரா எடுத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்காக அறிமுகமான ஸ்டப்ஸ் மூன்று ரன்கள் எடுத்தபோது ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதன்பிறகும் சிராஜின் விக்கெட் வேட்டை தொடர்ந்து கொண்டே இருந்தது. 2 ரன்கள் எடுத்திருந்த சோர்சி, 12 ரன்கள் எடுத்த பெடிங்ஹாம், 15 ரன்கள் எடுத்த கைல் வெரைன் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். அப்போது மார்கோ ஜேன்சன் களம் புகுந்தார். அவருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த விராட் கோலி செய்கை மூலம் ஐடியா கொடுத்தார். அடுத்த பந்தே துல்லியமாக சிராஜ் வீச, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த விக்கெட்டுடன் சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
January 3, 2024
வெளிநாட்டு மண்ணில் இந்த மேட்சுடன் சேர்த்து மூன்று முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் முகமது சிராஜ். படுமோசமாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 46 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முகேஷ்குமார், கேசவ் மகாராஜின் விக்கெட்டை கைப்பற்றி தன்னுடைய விக்கெட் கணக்கை தொடங்கினார்.