Doctor Vikatan: எனக்கு 46 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக நீரிழிவு பிரச்னை இருக்கிறது. நீரிழிவு வந்ததும் உடல் எடை அதிகமாக குறைந்துவிட்டது. தவிர அடிக்கடி அந்தரங்க உறுப்பில் அரிப்பும் ஏற்படுகிறது. நீரிழிவுக்கும் இந்தப் பிரச்னைகளுக்கும் அப்படி என்னதான் சம்பந்தம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவு பிரச்னையை முக்கியமான நான்கு அறிகுறிகளின் மூலம் கண்டுபிடிக்கலாம். அதீத தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக பசி மற்றும் எடை குறைவது என நான்கு பிரதான அறிகுறிகளுடன் பிறப்புறுப்பில் அரிப்பும் சேர்ந்துகொள்ளும்.
உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு குறையும்போது ரத்தத்திலிருந்து திசுக்களுக்குப் போக வேண்டிய ஆற்றல் குறைகிறது. அதாவது எந்த உறுப்புகளுக்கு சர்க்கரைச் சத்து தேவையோ, அங்கு போகாமல், தேவையில்லாத பகுதிகளில் போய்ச் சேரும். திசுக்களுக்கான ஆற்றலைக் கொடுப்பது சர்க்கரை. அது இல்லாமல் போகும்போது உடல் பலவீனமடைகிறது.

திசுக்களுக்கு சர்க்கரை போகாதபோது, மூளையானது, ‘இந்த நபர் சாப்பிடாமல் இருப்பதால்தான் திசுக்களுக்கு ஆற்றல் போகவில்லை, இவரை இன்னும் கொஞ்சம் சாப்பிட வைக்க வேண்டும்’ என நினைத்து, பசி உணர்வைத் தூண்டும். அதனால் அதிகம் பசிக்கும், அதிகம் சாப்பிடுவோம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். அதிகப்படியான சர்க்கரையை உடலானது சிறுநீரின் வழியே வெளித்தள்ளும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு 180-ஐ தாண்டிவிட்டால் சிறுநீரகம் அதை ஃபில்டர் செய்து வெளியே தள்ளும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உடலில் நீர்ச்சத்தின் அளவும் குறையும். அதனால் அதிக தாகம் எடுக்கிறது. திசுக்களும் பலமிழக்கின்றன, நீர்ச்சத்தும் இல்லை என்ற பட்சத்தில் உடல் எடையும் குறைகிறது.

சர்க்கரையானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறுவதால், அந்தரங்க உறுப்பில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும். அதனால்தான் பிறப்புறுப்பில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன. எனவே இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய அத்தனை செயல்களுக்கும் காரணம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான்.
குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து நீரிழிவு பிரச்னை இருக்கிறதா என தெரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு உறுதிசெய்யப்பட்டால், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளோடு, மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் தவறாமல் பின்பற்றும்போது ரத்தச் சர்க்கரை அளவும் கட்டுக்குள் வரும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளும் மறையும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.