“2022 – 23-ல் பாஜக தேர்தல் நன்கொடையாக ரூ.259 கோடி பெற்றது” – தனியார் அமைப்பு அறிக்கை

புதுடெல்லி: 2022-23 ஆம் ஆண்டில் பாஜக தேர்தல் நன்கொடையாக ரூ.259.08 கோடி பெற்றது என்று ஏடிஆர் – ஜனநாயக சீர்திருத்த சங்கம் ( (Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது. இந்தச் சங்கம் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்துவதை கொள்கையாகக் கொண்டு இயங்குகிறது. தேர்தல் கருத்துக் கணிப்புகள், தேர்தலில் போட்டியிடுவோரில் கோடீஸ்வர வேட்பாளர், ஊழல், கிரிமினல் குற்றச்சாட்டு பின்னணி கொண்டோர், தேர்தல் நிதி, நன்கொடை எனப் பல சுவாரஸ்யத் தகவல்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2022-23 ஆன் ஆண்டில் பாஜக தேர்தல் நன்கொடையாக ரூ.259.08 கோடி பெற்றது என்று தெரிவித்துள்ளது. மேலும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி (பிஆர்எஸ்) கட்சி 25 சதவீத நன்கொடைகளைப் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “2022 – 23 ஆம் ஆண்டில் 39 கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ.363 கோடியை தேர்தல் நன்கொடையாகக் கொடுத்துள்ளன. இவற்றில் 34 கார்பரேட் தொழில் நிறுவனங்கள் ப்ரூடன்ட் எலக்டோரல் ட்ரஸ்ட் என்ற அமைப்பின் வாயிலாக மொத்தம் ரூ.360 கோடி கொடுத்துள்ளன. ஒரு நிறுவனம் சமாஜ் எலக்டோரல் ட்ரஸ்டிடம் ரூ.2 கோடி கொடுத்துள்ளது. இரண்டு நிறுவனங்கள் பரிபர்தன் எலக்டோரல் ட்ரஸ்டிடம் ரூ.75.50 லட்சம் கொடுத்துள்ளனர். மேலும் இரண்டு நிறுவனங்கள் ட்ரையம்ப் எலக்டோரல் ட்ரஸ்டுக்கு தலா ரூ.50 லட்சம் கொடுத்துள்ளன.

மொத்தம் பெறப்பட்ட நன்கொடையில் பாஜக ரூ.259.08 கோடி பெற்றுள்ளது. அதாவது மொத்த நன்கொடையில் இது 70.69 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி ரூ.90 கோடி பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 24.56 சதவீதமாகும். இதுதவிர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக ரூ.17.40 கோடி பெற்றுள்ளன.

ப்ரூடன்ட் எலக்டோரல் ட்ரஸ்ட் மூலமாக பாஜகவுக்கு ரூ.256.25 கோடி கிடைத்துள்ளது. இதுவே 2021 – 22 ஆண்டில் இந்த ட்ரஸ்ட் மூலம் பாஜகவுக்கு ரூ.336.50 கோடி கிடைத்தது. அதேபோல் சமாஜ் ட்ரஸ்ட் மூலம் பாஜகவுக்கு 2022-23 ஆண்டில் ரூ.1.50 கோடி கிடைத்தது. ப்ரூடன்ட் ட்ரஸ்ட் பாஜக, பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர், ஆம் ஆத்மி ஆகிய 4 கட்சிகளுக்கு நன்கொடை பெற்றுக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சமாஜ் ட்ரஸ்ட் மூலம் ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது” என்று விவரிக்கப்பட்டுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் கவனம் பெறுகின்றன. வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ‘கிரவுட் பண்டிங்’ மூலம் நிதி திரட்டும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் அறிவித்தது. தேசத்திற்காக நன்கொடை கொடுங்கள் (டொனேட் ஃபார் தேஷ்) என்ற பெயரிலான காங்கிரஸின் பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 138 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 138-ன் மடங்குகளில் (ரூ.138, ரூ.1380, ரூ.13,800…) நன்கொடை வழங்குமாறு பொதுமக்களிடம் அக்கட்சி கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தேசத்திற்கான நன்கொடை பிரச்சாரத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி இதுவரை ரூ.10.15 கோடி நிதி வசூலித்துள்ளது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் அஜ்ய் மாக்கன் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.