விஜயகாந்த்: அனைத்து சங்கங்களும் பங்கேற்கும் இரங்கல் கூட்டம்; தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!

சமீபத்தில் மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டம் சென்னையில் நடக்கிறது.

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த், கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு நடிகர் சங்கம் சார்பில், வருகிற 19ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. 1999ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பிலிருந்த போது பல வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, சங்கத்தின் கடனை அடைத்திருக்கிறார். அதைப்போல காவிரி நீர் விவகாரத்தின் போது அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து நெய்வேலியில் நடத்திய போராட்டம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும் நடிகர்கள் ஆதரவுடன் உண்ணாவிரதம் நடத்தினார். அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்த காலகட்டங்களில் நடிகர்கள் சமூக பொறுப்பு மிக்கவர்கள் என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வந்தார்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் எதுவும் செய்யவில்லை என்ற குரல்கள் ஒலித்தன. ஆனால் அவர்களோ கேப்டன் மறைவிற்கு நாங்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்த வந்தோம். ஆனால், கேப்டன் ஒரு அரசியல் கட்சித் தலைவராகவும் இருந்ததால், நடிகர் சங்கம் முழுமையாக அவரது இறுதிச் சடங்குகளில் சரிவர ஈடுபடமுடியாமல் போனது என்கின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வருகிற 19ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து நடிகர் கார்த்தி, “நடிகர் சங்கத்தில் பெரிய சவால்கள் வரும்போதெல்லாம் நாங்கள் நினைக்கக்கூடிய நபராக கேப்டன் இருந்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

விஜயகாந்த்

“நடிகர் சங்கம் சார்பில், சினிமாவின் அனைத்து சங்கங்களுக்கும் இரங்கல் கூட்டம் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலியும், மௌன அஞ்சலியும் நடப்பதுடன், விரும்பியவர்கள் அவரது நினைவலைகளையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்’’ என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.