நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் உயிரிழந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நடிகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கோயம்பேடு தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் விஜயகாந்த் இறந்தபோது நேரில் வரமுடியாமல் வெளியூரில் இருந்த நடிகர் சூர்யா, கார்த்தி இருவரும் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீர் மல்க விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் சூர்யா, “விஜயகாந்த் அண்ணனின் இந்தப் பிரிவு மிகவும் துயரமானது. என் மனது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. சினிமாவில் என்னுடைய ஆரம்ப காலங்களில் நான் 4, 5 படங்கள் பண்ணியிருந்தேன். ஆனாலும் பெரிய பாராட்டுகள் எல்லாம் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை. பிறகு, ‘பெரியண்ணா’ என்ற படம் மூலம் விஜயகாந்த் அண்ணனுடன் சேர்ந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அந்த சமயத்தில் 8-10 நாட்கள் அவருடன் சேர்ந்து பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் சகோதர அன்புடன் என்னிடம் நடந்துகொண்டார். முதல் நாளே ‘நாம ஒன்னா சேர்ந்து சாப்டலாம்’ என்றார். அப்போது அசைவம் சாப்பிடக் கூடாது என்று அப்பாவுக்காக நான் ஒரு வேண்டுதல் வைத்திருந்தேன். அவருடன் சேர்ந்து சாப்பிடும்போது ‘நீ என்ன சைவம்தான் சாப்பிடுவியா…’ என்று உரிமையுடன் என்னைத் திட்டி அவர் தட்டிலிருந்த அசைவத்தை எடுத்து எனக்கு ஊட்டிவிட்டார். ‘நீ நல்ல நடிகனாக வரவேண்டும் என்று நினைக்கிற நல்லா சாப்பிடு…’ என்று அன்புடன் ஊட்டிவிட்டார். அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் என்னை அவ்வளவு அன்புடன் பார்த்துக்கொண்டார்.

அவருடன் இருந்த நாட்கள் எல்லாம் அவரை பிரமித்துப்போய் பார்த்தேன். பெரிய நட்சத்திரம் கொஞ்சம் தள்ளிதான் இருக்கணும் என்றெல்லாம் இருக்க மாட்டார். எல்லாரையும் பக்கத்தில் தன் அருகிலேயே வைத்துக்கொள்வார். அவரை அணுகுவது மிகவும் எளிது. யார் வேண்டுமாலும் அவரை எளிதில் சந்திக்கலாம். வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகளுக்கு சென்றபோதும் ஒவ்வொரு நாளும் அவரது துணிச்சலைப் பார்த்து அசந்திருக்கிறேன்.
அதன்பிறகு அவரைச் சந்தித்து நிறைய நேரம் அவருடன் உட்கார்ந்து பேசமுடியவில்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது. அவரைப்போல வேறுயாரும் இங்கு கிடையாது. இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு அவரது முகத்தைப் பார்க்க முடியாமல்போனது எனக்கு மிகப்பெரிய இழப்புதான். விஜயகாந்த் அண்ணனின் இழப்பு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று மிகுந்த வருத்தத்துடன் பேசியுள்ளார் சூர்யா.