புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள காந்தி பூங்கா பின்புறம் 1.97 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டடத்தை சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமலாக்கதுறையின் செயல்பாட்டை எந்த அளவுக்கு துணிச்சலோடு எதிர் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் துணிச்சலோடு எதிர் கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை அதிகமான ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டம். 2016 -லிருந்து 2021 வரை அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் ஏதாவது ஒரு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டால் எந்த ஊருக்கு பரிந்துரை செய்கின்றோமோ அந்த ஊருக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டவர் அப்போது அமைச்சராக இருந்த, இதே மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர். அவரேதான் தற்போது இன்று ஜனநாயக முறைப்படி ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று கூறுகிறார். எங்களைப் பொறுத்தவரை அன்று நாங்கள் பட்ட கஷ்டம் இன்று எந்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரும் படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் சுதந்திரமாக செயல்பட அனுமதிகளை தந்து அந்த உறுப்பினர்களும் போட்டியில் பங்கேற்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தான் முக்கியத்துவம் உள்ளதைப் போல் நினைத்துக் கொண்டு கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த அராஜகத்தை எல்லாம் மறந்துவிட்டு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.
அதேபோல், புதுக்கோட்டையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் விஜயபாஸ்கர். ஆனால், அந்த மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. 50 மாணவர்கள் சேர்க்கையுடன் நோயாளிகளுக்கும் தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் அவர் சென்று பார்த்திருக்கலாம். ஆனால், அவர் பார்ப்பதை தவிர்த்து விட்டு மருத்துவக் கல்லூரி செயல்படவில்லை என்கிறார்.

ஆனால், கொரோனா காலத்தில் வெறுமனே அறிவிப்பை மட்டும் செய்துவிட்டு நிதி ஒதுக்கவில்லை. பின்னர் எங்கள் ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கி கட்டடத்தைக் கட்டி முடித்து பல் மருத்துவக் கல்லூரி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
பிரதமர், அன்று நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது வந்தார். அப்போது எங்களது கருத்துக்களை தெரிவிக்க எதிர்ப்பை நாங்கள் அவருக்கு காட்டினோம். இன்று தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. அதனால், எந்த ஒரு அசம்பாவிதம் இங்கு நடந்தாலும் அதற்கு நாங்கள் தான் பொறுப்பு. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கூடிய தலையாயக் கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
இன்று உலக முதலீட்டாளர்கள் எல்லாம் தமிழ்நாடு நோக்கி வருகிறார்கள் என்று சொன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் 31 மாத காலத்தில் தமிழ்நாட்டை மிகப் பெரிய அமைதி பூங்காவாக எந்தவிதமான மத, இன கலவரங்கள் இல்லாமல் பாதுகாப்பாக மக்களை வைத்து சகோதரத்துவத்தோடு விட்டுக் கொடுத்து செல்வதன் காரணத்தினால் தான் இந்தியாவிலேயே தொழில் செய்ய ஏற்ற மாநிலம் தமிழ்நாடு என்ற முடிவுக்கு உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க வந்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை அமைதியை நிலைநாட்ட வேண்டும். அதுதான் எங்களது குறிக்கோள். அதனால், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பது எங்களுடைய குறிக்கோள் அல்ல. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அதிக நிதி தருவதாக கூறி கடன் கொடுத்ததை எல்லாம் புள்ளி விவரங்களாக சேர்த்து அதனை தந்துள்ளனர்.
நாங்கள் கூறுவது எங்களுக்கு அளித்த கடனை விட்டுவிட்டு நாங்கள் கொடுத்த வரியிலிருந்து எங்களுக்கு என்ன திருப்பி தந்துள்ளீர்கள் என்பதை பற்றி வெள்ளை அறிக்கை தர தயாராக இருக்கிறார்களா?. அதற்கு அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் என்னென்னவற்றுக்கு கடன் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து நிதி கொடுத்ததாக கூறுகின்றனர். உத்திரபிரதேசத்திற்கும், குஜராத்திற்கும், மகாராஷ்டிராவிற்கும், ராஜஸ்தானுக்கும் எவ்வளவு கொடுத்துள்ளார்கள், அங்கிருந்து எவ்வளவு வருமானம் அவர்களுக்கு சென்றது என்ற கணக்கை வெளியிட்டார்கள் என்றால் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது என்ற உண்மை தெரியும். அதனை ஒன்றிய நிதி அமைச்சர் செய்தால் நாங்கள் வரவேற்கின்றோம். தமிழ்நாடு முதலமைச்சர் தான் ஒருவரை அமைச்சராக வைத்துக் கொள்ளலாமா, கூடாதா என்பதை முடிவெடுக்க முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் சரியான முடிவு எடுத்து சரியாக செயல்படுவார். அவரைப் பொறுத்தவரை யாரை அமைச்சராக வைத்துக் கொள்வது, யாரை அமைச்சராக வைத்துக் கொள்ளக் கூடாது என்ற உரிமை அவருக்கு தான் உள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.