தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி ‘விக்ரம் வேதா’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘ஜவான்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், கத்ரீனா கைஃப் உடன் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நடைபெற்றது.

அதில் நடிகர் விஜய் சேதுபதியிடம் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது ஏன் என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “வில்லனாக நடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. நிஜ வாழ்க்கையில் யாரையும் டார்ச்சர் செய்யவோ அல்லது கொலை செய்யவோ முடியாது. இதே வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
நிஜத்தில் கோபமோ அல்லது ஈகோவோ இருந்தால் அதை வெளிப்படுத்தாமல் பணிவாகத்தான் இருக்க முடியும். ஆனால் திரைப்படங்களில் உணர்ச்சிகளோடு விளையாட முடியும்.

இதற்காகத் தயவு செய்து என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். உணர்ச்சி வெளிப்பாடுகள் என்பது, உணவு மற்றும் சுவையைப் போன்றது. நான் அனைத்து சுவைகளையும் கொண்டிருக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.