Captain Miller: “இது 2வது பாகம்தான்; முதல் பாகமும், சீக்வலாக 3வது பாகமும் வரும்" – அருண் மாதேஸ்வரன்

தனுஷ் நடிப்பில் ‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.

சிவராஜ்குமார், குமரவேல், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தனுஷ் இப்படத்தில் 20, 30 வயது என மூன்று டைம்லைன்களில் நடித்துள்ளார். நீண்ட நாளுக்குப் பிறகு தனுஷை, மீண்டும் ஒரு ஆக்ரோஷமான ஆக்‌ஷன் ஹிரோவாகத் திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதற்கேற்றவாறு நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரனிடம் ஆனந்த விகடன் இதழுக்கு பேசியிருந்தார். அவர் பேசியதிலிருந்து…

கேப்டன் மில்லர் | தனுஷ்

“படத்துக்கானக் கதையை எழுதும்போதே இது பவர்புல்லான கேரக்டர்கள் கொண்டது என்று தெரிந்துவிட்டது. ‘Saving Private Ryan’ படத்தில் டாம் ஹேன்ஸ் கேரக்டர் பெயர்கூட கேப்டன் மில்லர்தான். எனக்கு அந்த கேரக்டர் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படமும் அந்த விதத்தில் போராளிகளின் வாழ்க்கைதான்.

1930-40களில் நடக்கிற கதை. நாம் அங்கே இருந்தால் எப்படி உணர முடியுமோ அப்படி இருக்கும். அழுக்கு, புழுதி, வியர்வை, உரிமைகள் தடைபடும்போது, வர்ற ஆவேசம்னு எல்லாமே இருக்கும்.

கதை எழுதும்போதே இதைப் பெரிய பட்ஜெட் படமாக உணர்ந்தேன். அதற்கேற்ற பெரிய ஸ்டார் வேணும். அப்படி யோசித்ததில் தனுஷ் சரியாகவும் பொருந்தியும் வருவார்னு தோன்றிவிட்டது. ‘ராக்கி’ வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்திற்கு ஒப்புதல் கொடுத்தார். அந்த நம்பிக்கையை பெரிய விஷயமாக நினைப்பேன்.

இப்போது எடுத்திருப்பது கேப்டன் மில்லர் இரண்டாவது பாகம்தான். இதன் வெற்றிக்குப் பிறகு ப்ரீக்வலாக முதல் பாகமும், சீக்வலாக மூன்றாவது பாகமும் வர வாய்ப்பிருக்கிறது.

வெகுளித்தனமான பையனிலிருந்து வெடித்துக் கிளம்புகிற போராளி ஆவது வரைக்கும் அதில் அவர் போகணும். அவருக்கு நடிப்பில் தீனி போடுவது மாதிரி அமைந்துவிட்டால் குஷியாகிவிடுவார். பிரமாதமான பெர்பாமர். படத்தில் இந்த கேரக்டரை உயரத் தூக்கிட்டுப் போயிட்டார். சாதாரணக் காட்சியைக்கூட அசாதாரணத்தில் துடிக்கச் செய்வார்.

கேப்டன் மில்லர் | தனுஷ்

வந்து நின்னாலே கம்பீரம், நடிப்பும் வேணும். அவ்வளவு முக்கியமான, பக்குவமான ரோல். அதை சிவண்ணாதான் எடுத்துக்கூட்டி மனசில் வச்சு உடல்மொழியாகக் கொண்டுவர முடியும்.சந்தீப் கிஷன் அருமையான இளைஞன். இந்த இரண்டு பேரையும் நீங்க புதுப் பரிமாணத்தில் பார்க்க முடியும்னு நம்புறேன்.

பிரியங்கா மோகன் அவசியமான கேரக்டர். இவங்களும் ஒரு போராளிதான். படத்தில் முக்கியமான மாற்றங்களைச் செய்யக்கூடிய இடத்தில் அவங்க வருவாங்க. மதன் கார்க்கி வசனம் எழுத வந்தார். 1930 – 40களில் நடக்கிற கதை. வசனம் எல்லாம் கொஞ்சம் அந்தச் சமயம் பேசுகிற மாதிரியும் இருக்கணும். எளிமையா, புரியக்கூடிய விதத்திலும் அமையணும். அவர் பங்கும் முக்கியமானதாக இருந்தது.

இதில் ஜிவி எல்லோரும் போகிற வழியில் போகாமல், சுலபமான வழியிலும் போகாமல், புதுசாக ஒன்றைத் தேடிப் போயிருக்கார். அவர் தந்த குவாலிட்டி இதில் மில்லருக்கு பெரும் வித்தியாசத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.

படத்தில் 5% தான் லைட்ஸ் பயன்படுத்தியிருப்போம். மத்தபடி எல்லாமே இயற்கையான ஒளிதான். எல்லாத்துக்கும் ரெடியாக இருப்பார். குறைந்த அவகாசத்தில் ஆக்ஷன் காட்சிகளை நிறைவாகச் செய்யணும். சித்தார்த்தாவால் அது முடிந்தது.

ஜி.வி.பிரகாஷ், அருண் மாதேஸ்வரன்

திலீப் சுப்பராயன் ஆக்ஷன் இதில் முக்கியமான இடத்தை எடுத்திருக்கு.120 நாள்களில் 75 நாள்கள் ஆக்ஷன்தான். 1,000 பேரை வச்சு அவர் நடத்தின ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே அவ்வளவு நேர்த்தி.

கலை இயக்குநர் ராமலிங்கம் கோயில் செட் போட்ட போது அசல்னு அதைச் சுற்றி வந்து கும்பிட்டுப் போனவங்கதான் அதிகம்” என்று கேப்டன் மில்லர் குறித்து பகிர்ந்து கொண்டார் அருண்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.