புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 774 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,187 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 774 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,187 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் (92 சதவீதம் பேர்) வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் கரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிச.5ம் தேதி வரை கரோனா தெற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலேயே இருந்து வந்தது. குளிர் காலத்தின் தொடக்கம் மற்றும் ஜேஎன்.1 புதிய வைரஸ் கண்டறியப்பட்டதற்கு பின்னர் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டிச.5ம் தேதிக்கு பின்னர், கடந்த டிச. 31ம் தேதி ஒரு நாளில் 841 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021 மே மாதம் பதிவான உச்சபட்ச பாதிப்புகளை விட 0.2 சதவீதம் அதிகமாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தனர்.
மேலும் அத்தகவல்களின் படி, தற்போதுள்ள தரவாதாரங்களின்படி, அதிகரித்து வரும் கரோனா தெற்று பாதிப்புகளுக்கு புதிய வைரஸ் திரிபான ஜேஎன்.1 வைரஸ் காரணம் இல்லை. அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கடந்த காலங்களில் மூன்று கரோனா தொற்றின் அலைகளையும் சந்தித்துள்ளது. டெல்டா அலையின் போது, 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரை உச்சபட்ச பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. இதில் 2021, மே 7ம் தேதி 4,14,188 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது, 3,915 பேர் பாதிப்பால் உயிரிழந்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொற்று பாதிப்பு ஏற்பட்டத்திலிருந்து 4.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5.3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல் தொற்று பாதிப்பிலிருந்து 4.4 கோடி பேர் மீண்டுள்ளனர். தேசிய அளவில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் சதவீதம் 98.81 ஆகும். நாடு முழுவதும் 220.67 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன.